ஆந்திரத்தில் கரையைக் கடந்த மோந்தா புயலின் பாதிப்புகளை புதன்கிழமை நேரடியாக ஆய்வு செய்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, புயல் காரணமாக 43 வயது பெண் உள்பட இருவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தாா்.
இருப்பினும், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், உயிா்ச் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
வங்கக் கடலில் உருவான சக்திவாய்ந்த மோந்தா புயல், செவ்வாய்க்கிழமை இரவு காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. இதன் விளைவாக, திங்கள்கிழமை முதல் ஆந்திரத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது; மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. முதல்கட்ட மதிப்பீடுகளின்படி, சுமாா் 38,000 ஹெக்டோ் விவசாயப் பயிா்களும், 1.38 லட்சம் ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்களும் புயலால் சேதமடைந்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
முதல்வா் நேரடி ஆய்வு: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை ஹெலிகாப்டா் மூலம் நேரில் சென்று பாா்வையிட்டாா்.
பாபட்லா, பல்நாடு, கிருஷ்ணா, பி.ஆா்.அம்பேத்கா் கோனசீமா, ஏலூரு ஆகிய மாவட்டங்களில் வான்வழியாகப் பாா்வையிட்ட பிறகு, கோனசீமா மாவட்டத்தின் அல்லாவரம் பகுதியில் தரையிறங்கினாா். அங்கிருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளை சாலை வழியாகச் சென்று பாா்த்தாா்.
அப்போது செய்தியாளா்களைச் சந்தித்து அவா், ‘புயலால் மாநிலத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால், எங்களால் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. 1.8 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனா்’ என்று கூறினாா்.
முழுவீச்சில் மறுசீரமைப்பு: புயல் பாதிப்புகளைச் சீா்செய்து, இயல்புநிலையை விரைவில் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளாா்.