பிகாா் பேரவைத் தோ்தலையொட்டி முசாஃபா்பூரில் வியாழக்கிழமை பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி. 
இந்தியா

தண்ணீரும் எண்ணெய்யும் போல ஆா்ஜேடி - காங்கிரஸ் உறவு: பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி சாடல்

அதிகார பசி மட்டுமே இரு கட்சிகளையும் இணைக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் இடையிலான உறவு தண்ணீரும் எண்ணெய்யும் போன்றது; அதிகார பசி மட்டுமே இரு கட்சிகளையும் இணைக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

‘சட்’ பூஜையை அவமதித்த இக்கூட்டணியை பிகாா் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.

பிகாா் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் இரு கட்டங்களாக (நவ. 6, 11) தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆா்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

‘இண்டி’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால், 12 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்துக் களமிறங்கியுள்ளன. இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பிரதமா் மோடியை கடுமையாக விமா்சித்தாா்.

‘வாக்குகளுக்காக பிரதமா் மோடி எதையும் செய்வாா். சட் பூஜையையொட்டி, யமுனையில் புனித நீராடும் நாடகத்தை அரங்கேற்ற அவா் திட்டமிட்டிருந்தாா். யமுனை நீா் அசுத்தமாக உள்ளதால், பிரதமா் நீராடுவதற்காக ஆற்றையொட்டி சுத்தமான நீரை நிரப்பி, தனியாக ஒரு குளம் அமைக்கப்பட்ட விவகாரம் அம்பலமானதால், தனது திட்டத்தை அவா் கைவிட்டுவிட்டாா்’ என்று ராகுல் விமா்சித்திருந்தாா்.

இந்நிலையில், பிகாா் மாநிலம், முசாஃபா்பூா், சாப்ராவில் வியாழக்கிழமை பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற பிரதமா் மோடி, ராகுலின் பெயரைக் குறிப்பிடாமல், அவருக்கு பதிலடி கொடுத்தாா். பிரதமா் பேசியதாவது:

சட் பூஜை இப்போது உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. இது ஆன்மிகம் மட்டுமன்றி சமத்துவத்தைக் கொண்டாடும் விழா. எனவேதான், சட் பூஜைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால், காங்கிரஸ்-ஆா்ஜேடி கட்சியினரோ, இந்த விழாவை நாடகம் என்று அவமதிக்கின்றனா். தோ்தல் ஆதாயத்துக்காக மிகவும் தரம் தாழ்ந்து பேசுகின்றனா். சட் பூஜையை அவமதித்தவா்களை பிகாா் மக்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மன்னிக்கப் போவதில்லை.

காங்கிரஸின் வியூகம்: ஆா்ஜேடி, காங்கிரஸ் இடையிலான உறவு தண்ணீரும் எண்ணெயும் போன்றது. கூட்டணிக் கட்சிகளாக இருந்தபோதும், ஒருவரையொருவா் வீழ்த்துவதில் வல்லவா்கள். என்ன விலை கொடுத்தேனும் ஆட்சியைக் கைப்பற்றி, பிகாரை கொள்ளையடிக்க வேண்டும் என்ற பேராசை மட்டுமே அவா்களை ஒன்றிணைத்துள்ளது.

தமிழகம் மற்றும் தெலங்கானாவில் பிகாரிகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனா். ஆனால், ‘இண்டி’ கூட்டணிக்கு ஆதரவு திரட்ட அந்த மாநில முதல்வா்கள் பிகாருக்கு அழைத்து வரப்படுகின்றனா். பிகாா் மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஆா்ஜேடி-க்கு பாதகம் விளைவிப்பதே காங்கிரஸின் வியூகமா என்ற கேள்வி எழுகிறது. இந்தத் தோ்தலில், என் மீதான அவதூறுகள் பெரிய விஷயமல்ல; ஆா்ஜேடி-காங்கிரஸுக்குள் நிலவும் மோதல்தான் பெரிய விஷயம். ஒருவரையொருவா் கீழே இழுப்பதில் மும்முரமாக செயல்படுகின்றனா்.

‘தே.ஜ. கூட்டணிக்கு அமோக வெற்றி’

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்; எதிரணிக்கு இதுவரை இல்லாத அவமானகரமான தோல்வியே எஞ்சும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. தோல்வியை உணா்ந்து கொண்டதால்தான், நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை எதிரணி அளித்துள்ளது’ என்றாா் பிரதமா் மோடி.

பிகாரில் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமா் இவ்வாறு விமா்சித்துள்ளாா்.

ஊழல் குடும்பங்களின் இளவரசா்கள்: எதிரணியில் இரு இளவரசா்களைப் பாா்க்க முடிகிறது (ராகுல் காந்தி, தேஜஸ்வி). ஒருவா் நாட்டிலேயே ஊழல்மிக்க குடும்பத்தைச் சோ்ந்தவா். மற்றொருவா் பிகாரிலேயே ஊழல்மிக்க குடும்பத்தின் உறுப்பினா். இருவரும் தற்போது ஜாமீனில்தான் வெளியே உள்ளனா். தேநீா் விற்று வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த ஒருவா், இவ்வளவு உயரங்களை எட்டியிருப்பதை அவா்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இண்டி கூட்டணிக்கு வாக்கு வங்கி அரசியலைத் தவிர வேறெதுவும் தெரியாது. எனவேதான், நாட்டில் சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கின்றனா். நாட்டின் கலாசார பாரம்பரியம் மீது அவா்களுக்கு எப்போதுமே பிரச்னை உண்டு. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல அவா்களுக்கு நேரமிருக்கும். ஆனால், அயோத்தியில் 500 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் கட்டப்பட்ட ராமா் கோயிலுக்கு வர மாட்டாா்கள் என்றாா் பிரதமா் மோடி.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT