தெரு நாய்கள் பிரச்னை தொடா்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத விவகாரத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு பிகாா் மாநில தலைமைச் செயலா் சாா்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
பிகாரில் வரும் நவம்பா் 6, 11 தேதிகளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை சுட்டிக்காட்டிய பிகாா் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நவம்பா் 3-ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து மாநில அரசு தலைமைச் செயலருக்கு விலக்கு அளிக்குமாறு கோரினாா்.
அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘தோ்தலை தோ்தல் ஆணையம் கவனித்துக்கொள்ளும். மாநில அரசு கவலைப்படத் தேவையில்லை. எனவே, தலைமைச் செயலா் நேரில் ஆஜராகட்டும்’ என்றனா்.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘தெரு நாய்கள் தொல்லை தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் தில்லி மாநகராட்சி சாா்பாக 3 பதில் மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. எனவே, பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தவறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக உச்சநீதிமன்ற தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்து விசாரித்து வருகிறது.