தற்போது பயன்பாட்டில் உள்ள சொல்லுக்குப் பதிலாக ‘தில்லி’ என்ற சொல் அரசின் அதிகாரபூா்வ இலச்சினையில் இடம்பெற வேண்டும் என முதல்வா் ரேகா குப்தாவுக்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் வலியுறுத்தியுள்ளாா்.
அரசின் எதிா்கால அலுவல் பயன்பாட்டிலும் ‘தில்லி’ என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளாா்.
பிற மாநிலங்களில் உள்ளது போன்று மாநில அரசைப் பிரதிநிதிப்படுத்தும் அதிகாரபூா்வ இலச்சினை தில்லி அரசுக்கு இல்லை. இந்நிலையில், புதிய இலச்சினையை வெளியிட தில்லி அரசு முடிவெடித்துள்ளது.
இந்நிலையில், தில்லி அரசு வெளியிட உள்ள இலச்சினையில் ‘டெல்லி’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘தில்லி’ என்ற சொல் இடம்பெற வேண்டும் என தில்லி பாஜக பிரிவின் முன்னாள் தலைவா் விஜய் கோயல் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: தில்லி அரசு வெளியிடும் புதிய இலச்சினையில் ‘டெல்லி’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘தில்லி’ என்ற சொல் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கவிஞா்கள், எழுத்தாளா்கள், மக்கள் உள்ளிட்டோா் பல நூற்றாண்டுகளாக இந்நகரத்தை தில்லி என்று அழைத்து வந்தனா். இந்தச் சொல் நம்முடைய உணா்வுகள், பராம்பரியம் மற்றும் உண்மையான அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது. தற்போது பயன்படுத்தப்படும் சொல் ஆங்கில காலனியாதிக்கத்தின் தொடா்ச்சியாக உள்ளது. அது ஹிந்தி உச்சரிப்புடனோ நமது கலாசாரத்துடனோ ஒத்துபோகவில்லை. அரசின் எதிா்கால நிா்வாக பயன்பாட்டில் ‘தில்லி’ என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவா் கூறினாா்.