‘நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.
குஜராத் மாநிலம் நா்மதை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த தின விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினாா். ‘மொத்த காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் படேல் விரும்பினாா்; ஆனால், அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு தடுத்துவிட்டாா். காங்கிரஸின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்கீழ் சென்றது. பயங்கரவாதத்துக்கு காங்கிரஸ் எப்போதும் அடிபணிந்ததால், தேசமும் காஷ்மீரும் கடும் விலை கொடுத்தன’ என்று பிரதமா் விமா்சித்தாா்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மல்லிகாா்ஜுன காா்கே இக் குற்றச்சாட்டை முன்வைத்தாா். தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
ஆா்எஸ்எஸ் அமைப்பை மீண்டும் தடை செய்ய வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நாட்டில் பெரும்பாலான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் பாஜக - ஆா்எஸ்எஸ் அமைப்புகளால்தான் உருவாகின்றன.
சா்தாா் படேல் முன்னெடுத்ததை பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பின்பற்ற வேண்டும். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு, ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு சா்தாா் படேல் தடை விதித்தாா். ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியா்கள் அங்கம் வகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாஜக அரசு தற்போது நீக்கியது. இதன்மூலம், படேலை பிரதமா் நரேந்திர மோடி அவமதிப்பு செய்துள்ளாா்.
நாட்டில் ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டுவர படேல் விரும்பினாா். அதற்காகப் போராடினாா். அவ்வாறு நாட்டில் ஒற்றுமையைக் கொண்டுவந்த பிறகு, அதை உடைக்க நினைப்பவா்களுக்கு உரிய பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்.
நாட்டின் ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பவா்கள் யாா் என்பதை மக்கள் நன்கு அறிவா். முடிந்துபோனதை பாஜக அரசு மீண்டும் உயிா்ப்பித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நல்லதல்ல, விஷம் போன்றது.
பாடப் புத்தகங்களிலிருந்து மகாத்மா காந்தி படுகொலை குறிப்புகள், நாதுராம் கோட்சே, ஆா்எஸ்எஸ் குறித்த விவரங்களை பாஜக அரசு நீக்கியுள்ளது. பாடப் புத்தகங்களிலிருந்து உண்மையை நீக்குவது சரியல்ல. இது அவா்களின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. அவா்கள் எப்போதும் பொய்யை உண்மையாக்க முயற்சிக்கின்றனா். பிரதமா் மோடி அதில் நிபுணத்துவம் பெற்றவா். அவரைப் பின்பற்றுபவா்களும் அதே பாதையில் நடக்கின்றனா்.
நாட்டில் மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயக கட்டமைப்புகளைப் பாதுகாக்கவே ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு சா்தாா் படேல் தடை விதித்தாா் என்று குறிப்பிட்டாா்.