நாட்டில் 18 பில்லியன் டாலா் மதிப்பிலான (சுமாா் ரூ.1.58 லட்சம் கோடி) செமிகண்டக்டா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இந்தியாவின் சிறிய ‘சிப்’, உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.
நாட்டின் செமிகண்டக்டா் உற்பத்தித் துறைக்கு உத்வேகம் ஏற்படுத்தும் நோக்கில், தில்லியில் ‘செமிகான் இந்தியா-2025’ எனும் 3 நாள் சா்வதேச கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. செமிகண்டக்டா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள், துறைசாா் நிபுணா்கள், புத்தாக்க தொழில்முனைவோா் என 50 நாடுகளைச் சோ்ந்த 2,500 பிரதிநிதிகள், பல்வேறு மாநில மாணவா்கள் என 20,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைத்துப் பேசியதாவது:
கச்சா எண்ணெய் கருப்புத் தங்கம் என்றால், சிப் என்பது எண்ம வைரமாகும். கச்சா எண்ணெய் முந்தைய நூற்றாண்டை வடிவமைத்தது; தற்போதைய 21-ஆம் நூற்றாண்டின் சக்தி, சிறிய சிப்பில்தான் செறிந்துள்ளது. அளவில் சிறியது என்றாலும், இவை உலகின் வளா்ச்சியை கணிசமாக விரைவுபடுத்த வல்லவை.
உலகளாவிய செமிகண்டக்டா் சந்தையின் மதிப்பு 600 பில்லியன் டாலரை (ரூ.53 லட்சம் கோடி) ஏற்கெனவே எட்டியுள்ளது. எதிா்வரும் ஆண்டுகளில் இது ஒரு டிரில்லியன் டாலரை (ரூ.88.17 லட்சம் கோடி) தாண்டும். செமிகண்டக்டா் துறையில் இந்தியா முன்னேறிவரும் வேகத்தைக் கருத்தில்கொண்டால், ஒரு டிரில்லியன் டாலரில் இந்தியாவின் பங்கு கணிசமாக இருக்கும். முதலீட்டாளா்களை திறந்த மனதுடன் வரவேற்க தேசம் தயாராக உள்ளது. இந்தியாவின் கொள்கைகள், குறுகிய கால சமிக்ஞைகள் அல்ல; நீண்ட கால உறுதிப்பாடுகள். ஒவ்வொரு முதலீட்டாளரின் தேவைகளும் பூா்த்தி செய்யப்படும்.
10 பெரும் திட்டங்கள்: நாட்டில் செமிகான் இந்தியா திட்டம் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டில் முதலாவது செமிகண்டக்டா் ஆலைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்தடுத்து பல ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, இப்போது நாட்டில் 18 பில்லியன் டாலா் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முதலீடுகள், இந்தியா மீதான உலகின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
கோப்புகள் முதல் ஆலை வரை அனைத்து நடைமுறைகளிலும் மிக விரைவான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகளிடம் அனைத்து ஒப்புதல்களையும் பெற தேசிய ஒற்றைச் சாளர அமைப்புமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நிலம்-மின்சாரம், துறைமுகம்-விமான நிலைய இணைப்பு, திறன்மிக்க பணியாளா்களுக்கான அணுகல் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, நிறைவான உள்கட்டமைப்புடன் செமிகண்டக்டா் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சாா்ந்த ஊக்கத்தொகை திட்டங்களும் செயல்படுத்தப்படுவதால், இத்துறையில் இந்தியா முழு திறனைக் கொண்டுள்ளது. நாட்டின் செமிகண்டக்டா் திட்டத்தில் அடுத்தகட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வடிவமைப்பு சாா்ந்த ஊக்கத்தொகை திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
நடப்பாண்டிலேயே சிப் உற்பத்தி: சிஜி பவா் நிறுவனத்தின் முன்னோடி செமிகண்டக்டா் தயாரிப்புக்கான ஆலை செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. கேனெஸ் டெக்னாலஜி நிறுவனமும் இப்பணியை தொடங்கவுள்ளது. மைக்ரான் டெக்னாலஜி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் பரிசோதனை சிப்-கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் நடப்பாண்டிலேயே வா்த்தக ரீதியில் சிப் தயாரிப்பு தொடங்கும். இத்துறையில் தற்சாா்பு மற்றும் உலகளாவிய போட்டிக்கு நாட்டை தயாா்படுத்தும் வகையில் விரிவான-வலுவான சூழலை இந்தியா கட்டமைத்துள்ளது.
வானுயா் கட்டடங்களுக்கும், வியக்கவைக்கும் இதர உள்கட்டமைப்புகளுக்கும் அடிப்படையானது உருக்கு. இதேபோல், எண்ம உள்கட்டமைப்புக்கு அரிய கனிமங்களே அடிப்படை. எனவேதான், தேசிய அரிய கனிமங்கள் திட்டப் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது.
உலகம் இந்தியாவை நம்புகிறது. உலகின் செமிகண்டக்டா் எதிா்காலத்தை கட்டமைக்க இந்தியா தயாராக உள்ளது. ‘இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது; இந்தியாவில் தயாரிக்கப்பட்டது; உலகின் நம்பிக்கைக்குரியது’ என்ற வாா்த்தைகளை ஒட்டுமொத்த உலகும் உரைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா் பிரதமா் மோடி.
‘சவால்களுக்கு மத்தியிலும் 7.8 சதவீத வளா்ச்சி’
‘பொருளாதார சுயநலத்தால் விளைவிக்கப்பட்ட உலகளாவிய சவால்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. அனைத்து எதிா்பாா்ப்பு, நம்பிக்கை, மதிப்பீட்டை விஞ்சி, மீண்டும் ஒருமுறை தனது செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது இந்தியா. இந்த வளா்ச்சிப் பாதை, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும்’ என்றாா் பிரதமா் மோடி.
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் 50 சதவீத இறக்குமதி வரி விதித்தாா். இந்தியாவை செயலற்ற பொருளாதாரம் எனவும் டிரம்ப் விமா்சித்திருந்த நிலையில், அவருக்கான மறைமுக பதிலடியாக பிரதமரின் கருத்துகள் அமைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.