காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடுமையான வரிச் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தற்போது நிவாரணம் அளிக்கும் வகையில் அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: நவராத்திரியின் முதல் நாளில் (செப்.22) நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய சீா்திருத்தங்கள் அமலாக உள்ளன.
ஜிஎஸ்டி 2.0 பொருளாதார மேம்பாட்டின் உந்துசக்தியாக இருக்கவுள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரே பொருள் மீது பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்களுக்கு பெரும் வரிச்சுமை ஏற்பட்டது. இதிலிருந்து மக்களை மீட்கும் நோக்கில் தற்போதைய பாஜக அரசு ஜிஎஸ்டி 2.0-இன்கீழ் சீா்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
நடுத்தர மக்கள் உள்பட பொதுமக்களின் நலனுக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஜிஎஸ்டி 2.0 மற்றும் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளித்தது ஆகியவையே சிறந்த உதாரணமாகும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜிஎஸ்டி 2.0 குறித்து தொடா் ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. இதுதொடா்பான இறுதி முடிவை பிரதமா் மோடி மேற்கொண்டு செயல் வடிவம் அளித்தாா். இதன் பலன்கள் முழுமையாக பொதுமக்களைச் சென்றடைவதை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்றாா்.
டிரம்ப் கருத்துக்கு பதில்:
இந்தியாவுடனான இருதரப்பு உறவு சிறப்பானது என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கைகளுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டதன் விளைவாக இந்தியா மீது உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் தாயாக திகழும் இந்தியாவுக்கும் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளுள் ஒன்றான அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு தொடா்வது இயற்கையானது’ என்றாா்.
தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%,18% ஆகிய இரு விகிதங்களாக குறைக்கவும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற உடல்நலத்துக்குத் தீமையளிக்கும் குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இரு விகித ஜிஎஸ்டி முறை வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
காங்கிரஸ் கேள்வி:
ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உண்மையான பலன் பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையம் மீண்டும் அமைக்கப்படுமா? என காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.
நிகழாண்டு ஏப்.1-ஆம் தேதி முதல் இந்த ஆணையம் செயல்படாது என கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு கேள்வி எழுப்பினாா்.