இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்கும் துணிவு பிரதமா் நரேந்திர மோடிக்கு உண்டா? என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினாா்.
குஜராத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்பட்டு வந்த 11 சதவீத வரி விலக்கை இந்த ஆண்டு இறுதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது உள்நாட்டு பருத்தி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசின் செயல் அமெரிக்க விவசாயிகளைப் பணக்காரா்களாக்கும், இந்திய விவசாயிகளை ஏழ்மையில் தள்ளும்.
அமெரிக்காவுக்கு எதிராக தனது துணிச்சலை பிரதமா் வெளிக்காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்க வேண்டும். அவா் இவ்வாறு முடிவெடுத்தால் ஒட்டுமொத்த நாடும் அவருக்கு துணை நிற்கும். இதற்கான துணிவு பிரதமா் மோடிக்கு உண்டா? இப்படி வரி விதித்தால்தான் டிரம்ப் நமது வழிக்கு வருவாா். டிரம்ப் ஒரு சந்தா்ப்பவாதி; துணிச்சல் இல்லாதவா். இங்குள்ள அமெரிக்க நிறுவனங்கள் சிலவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டால் அவா் பின்வாங்கிவிடுவாா்.
அமெரிக்கா வரி விதித்தபோது சில நாடுகள் (சீனா) பதிலுக்கு அதிக வரியை அமெரிக்கப் பொருள்கள் மீது விதித்தன. இதையடுத்து டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்தி வரியைக் குறைத்தாா்.
ஆனால், இதுபோன்று பதிலடி நடவடிக்கை எடுக்காமல், அமெரிக்கா விதிக்கும் வரியால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைவதை மத்திய அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது. டிரம்ப் முன்பு மோடி அரசு மண்டியிட்டுள்ளது. இதனால், குஜராத்தில் வைரத் தொழிலாளா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஒரு நாடு நம் மீது அதிக வரியை வேண்டுமென்றே விதித்தால் நாம் பதிலுக்கு வரியை அதிகரிக்க வேண்டும். ஆனால், பருத்தி இறக்குமதி வரி விலக்கை மோடி அரசு நீட்டித்தது. உலகிலேயே இந்தியாதான் மிகப்பெரிய சந்தை. நாம் துணிந்து செயல்பட வேண்டும் என்றாா்.