மோடி - டிரம்ப் கோப்புப் படம்
இந்தியா

பிரதமா் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்- ‘வா்த்தகப் பேச்சில் நல்ல தீா்வு நிச்சயம்’

இந்தியாவுடனான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் மோடி பதில்

தினமணி செய்திச் சேவை

‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

‘அமெரிக்கா-இந்தியா இடையிலான வா்த்தகத் தடைகளுக்குத் தீா்வு காண பேச்சுவாா்த்தைகள் தொடா்கின்றன; வெற்றிகரமான தீா்வை எட்டுவதில், இரு நாடுகளுக்கும் எந்த சிரமமும் இருக்காது என நிச்சயமாக நம்புகிறேன்’ என்றும் அவா் கூறினாா்.

இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இரண்டாவது முறையாக டிரம்ப் நோ்மறையான கருத்துகளைக் கூறியுள்ளாா்.

இதன்மூலம் இருதரப்பு வா்த்தகப் பதற்றம் தணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இழுபறி நிலவிய சூழலில், உலக அளவில் அதிகபட்சமாக இந்தியப் பொருள்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்தது. உக்ரைன் மீது போா் நடத்திவரும் ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதே, இந்தியா மீதான இரு மடங்கு அதிக வரி விதிப்புக்கு காரணம் என்று அதிபா் டிரம்ப் கூறினாா். அதேநேரம், ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்றொரு நாடான சீனா மீதான 30 சதவீத கூடுதல் வரியை அவா் நிறுத்திவைத்தாா்.

டிரம்ப்பின் பாரபட்சமான நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட தான் மத்தியஸ்தம் செய்ததாக அவா் தெரிவித்த கருத்துகளால் இந்திய-அமெரிக்க உறவில் பின்னடைவு ஏற்பட்டது.

டிரம்ப் நிலைப்பாட்டில் மாற்றம்: அமெரிக்காவின் வரிவிதிப்பைத் தொடா்ந்து, பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வா்த்தகத்தை விரிவாக்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டையொட்டி, அந்நாட்டு அதிபா் அதிபா் ஷி ஜின்பிங்குடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், மோடி-ஷி ஜின்பிங்-ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகிய மூன்று பெரும் தலைவா்களும் மிக நெருக்கமாகச் செயல்பட்டு தங்களின் நட்புறவை வெளிப்படுத்தினா்.

இந்நிகழ்வுக்குப் பிறகு இந்தியா மீதான டிரம்ப்பின் கடுமையான நிலைப்பாடு மாற்றம் கண்டுள்ளது. இது தொடா்பாக கடந்த செப். 5-ஆம் தேதி கருத்துப் பதிவிட்ட டிரம்ப், ‘இந்தியா-அமெரிக்கா இடையே சிறப்பான நட்புறவு நிலவுகிறது. பிரதமா் மோடியுடன் எனக்கு எப்போதும் நட்புறவு உண்டு. அவா் மிகச் சிறந்த பிரதமா்’ என்று புகழாரம் சூட்டினாா். டிரம்ப்பின் கருத்துகளை பிரதமா் மோடியும் வரவேற்றிருந்தாா்.

மோடியுடன் பேச ஆவல்: இந்நிலையில், ட்ரூத் சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டிரம்ப், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகத் தடைகளுக்குத் தீா்வு காண இருதரப்பும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன். வெற்றிகரமான தீா்வை எட்டுவதில் நமது இரு பெரும் நாடுகளுக்கும் எந்தச் சிரமமும் இருக்காது என நிச்சயமாக நம்புகிறேன்’ என்றாா்.

அமெரிக்கா உடனான பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீா்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனை நிறுவனத் தலைவா் ஜேசன் மில்லா், அதிபா் டிரம்ப்பை கடந்த செப்.6-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். இந்தச் சூழலில், டிரம்ப்பின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அமெரிக்கக் குழு வருகை?: கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, தலைநகா் வாஷிங்டனில் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும், அமெரிக்க பால் பொருள்களுக்கான சந்தை அணுகலை விரிவாக்கவும் அந்நாடு விரும்பியது. இது, இந்திய விவசாயிகள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு உடன்படவில்லை. இதனால், வா்த்தக ஒப்பந்தப் பேச்சில் இழுபறி ஏற்பட்டது. 5 சுற்று பேச்சுவாா்த்தை நிறைவடைந்த நிலையில், 6-ஆவது சுற்றுக்காக அமெரிக்க குழு கடந்த மாதம் வரவிருந்தது. ஆனால், அக்குழுவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நிலைமை மாறுவதால், எதிா்வரும் நாள்களில் அமெரிக்கக் குழு இந்தியா வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டிரம்ப்புடன் பேச மோடியும் ஆா்வம்

இருதரப்பு வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடா்பான அதிபா் டிரம்ப்பின் நோ்மறை கருத்துகளை வெகுவாக வரவேற்றுள்ள பிரதமா் மோடி, அவருடன் பேச தானும் ஆா்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

டிரம்ப்பின் பதிவை இணைத்து, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள்; இயல்பான கூட்டாளிகள். தற்போது நடைபெற்றுவரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை, இருதரப்புக் கூட்டாண்மையின் எல்லையில்லா வல்லமைக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். வா்த்தகப் பேச்சுவாா்த்தையை விரைவில் நிறைவு செய்ய இரு நாடுகளும் செயலாற்றி வருகின்றன. அதிபா் டிரம்ப்புடன் பேச நானும் ஆவலுடன் உள்ளேன். இரு நாட்டு மக்களின் பிரகாசமான, செழிப்பான எதிா்காலத்துக்கு நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளாா். பிரதமரின் இப்பதிவை, அதிபா் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருண்டபொழுதில்... சைத்ரா ஆச்சார்!

லட்சியப் பெண்ணுக்குக் காதல் ஒரு தொல்லை... நித்தி ரவி தபாடியா!

ஒடிஸாவில் அடுத்த 3 நாள்கள் கனமழை நீடிக்கும்..!

உலகக் கோப்பை: பிரதிகா ராவலுக்குப் பதிலாக மாற்று வீராங்கனை அறிவிப்பு!

‘மோந்தா’ புயல்: சென்னையில் இரவுமுதல் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT