பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார். குவாஹாட்டியிலுள்ள லோக்ப்ரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமரை அஸ்ஸாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிச்வா சர்மா மற்றும் பிற அமைச்சர்கள் வரவேற்றனர்.
மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.
முக்கியமாக பாரத ரத்னா விருதாளரும், புகழ்பெற்ற பாடகருமான பூபேன் ஹஸாரிகாவின் 100-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா்; ரூ.19,000 கோடியிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளாா்.
இன்று (செப். 13) காலை மிஸோரம் மாநிலத்தைச் சென்றடைந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சூரசந்த்பூருக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே, கனமழை பெய்ததால் முதலில் அவர், மிஸோரத்திலுருந்து மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.
இம்பால் விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா, முதன்மைச் செயலர் புனித் குமார் கோயல் ஆகியோர் வரவேற்பளித்தனர். அதன்பின், சாலை மார்க்கமாக மணிப்பூரின் சூரசந்த்பூரைச் சென்றடைந்தார் மோடி. அங்கு மக்களைச் சந்தித்த பின், மீண்டும் இம்பால் திரும்பிய மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதன்பின், மாலை அஸ்ஸாம் சென்றடைந்தார்.
கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மனிப்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்கு சுமார் 5 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே இருக்கப்போவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமரின் அரை நாளுக்கும் குறைவான மணிப்பூர் பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ள கங்கிரஸ், ‘மணிப்பூர் மக்களுக்கு பெருத்த அவமரியாதையாகவே இதைக் கருத முடியும்’ என்று கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.