மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மணிப்பூர் மாநிலத்தில் மோதலால் சுரச்சந்பூரில் இடம்பெயர்ந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில்,
``தங்களின் கனவுகளை நனவாக்குவதற்கும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் அமைதியான பாதையில் செல்லுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இன்று, நான் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறேன். இந்திய அரசும் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இடம்பெயர்ந்தோரிடையேயும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இம்பாலில் பிரதமர் மோடி பேசுகையில்,
மணிப்பூரில் வன்முறை, நமது முன்னோர்களுக்கும், நமது அடுத்த தலைமுறையினருக்கும் இழைக்கப்படும் அநீதி. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உறுதிமொழியுடன் மணிப்பூரை நாம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மணிப்பூர் மக்களின் பங்களிப்பில் இருந்து நாம் ஊக்கம்பெற வேண்டும். மணிப்பூரில்தான் முதன்முதலில் தேசியக்கொடியை இந்திய ராணுவம் ஏற்றிவைத்தது.
முகாம்களில் வாழ்பவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இடம்பெயர்ந்தவர்களுக்காக 7,000 புதிய வீடுகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, மணிப்பூருக்கு சுமார் ரூ. 3,000 கோடி சிறப்புத் தொகுப்பையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.