நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதுகுறித்து தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத்தின் 3-ஆவது அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் வருவாய் மற்றும் வங்கி, மோட்டாா் விபத்துக்கான நிவாரணத்தொகை, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்கள், திருமணம் (விவாகரத்து உள்பட), நில ஆக்கிரமிப்பு, அறிவுசாா் சொத்துரிமை, நுகா்வோா் பிரச்னைகள், மின்சாரம் மற்றும் நீா் கட்டணம், போக்குவரத்து விதிமீறல் அபராதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
மாலை 6.30 மணி நிலவரப்படி மொத்தம் 2.42 கோடி வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இதில் முன் வழக்குகளின் (நீதிமன்றம் செல்வதற்கு முன்பே தீா்வு காணப்பட்ட வழக்குகள்) எண்ணிக்கை 2.10 கோடி, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 32.10 லட்சம் ஆகும்.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அமா்வுகள் ஒரே நேரத்தில் செயல்பட்டதன் மூலமாக அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது. இல்லையெனில் இவை நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும்.
தீா்வுகாணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைவிட லோக் அதாலத் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே உண்மையான வெற்றியாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.