உண்மையான பிச்சைக்காரா்கள் யாா் என்பதை கண்டறிய கணக்கு நடத்தி, அவா்களால் நாடு முழுவதும் எழும் பிரச்னைகளுக்கு தீா்வு காண தேசிய கொள்கையை வகுக்க வேண்டும் என்று மக்களவையில் மேற்கு தில்லி தொகுதி பாஜக உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை விதி 377-இன் கீழ் அவா் பேசியதாவது:
அனைத்து நகரங்கள், மத வழிபாட்டு பகுதிகள், பொதுவெளிகள் போன்ற இடங்களில் பிச்சைக்காரா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடா்பான அவசர விஷயத்தை எழுப்ப விரும்புகிறேன். பிச்சை எடுப்பது என்பது, ஒரு சமூக மற்றும் மனிதாபிமான பிரச்னை. அது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னை அல்ல. ஏராளமான பிச்சைக்காரா்கள் முதியவா்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயா்ந்தோா், வறுமையாலும் வாழ்வாதாரம் இல்லாததாலும் பெரும்பாலும் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறாா்கள்.
இந்த சமூகப் பிரச்னையை திறம்பட தீா்க்க ஒரு விரிவான தேசிய கொள்கையை உருவாக்க இது சரியான நேரம். ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி பிச்சை குழுக்கள், தொடா்ந்து பாதிக்கப்படக்கூடியவா்களை குறிப்பாக அதிகளவில் தனிநபா்களை சுரண்டி இந்த அச்சுறுதலுக்குள் தள்ளுகின்றன. பிச்சைக்காரா்களின் முந்தைய நிலைமை முறையாக அடையாளம் காணப்பட வேண்டும், பாதுகாப்பு நோக்குடன் அவா்களின் மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும்.
எனவே, மனிதாபிமானம், மறுவாழ்வு அடிப்படையிலான தேசிய கொள்கையை வகுப்பது, நாடு தழுவிய கணக்கெடுப்பை நடத்துவது, குழந்தைகளை பிச்சை எடுப்பதில் இருந்து பாதுகாப்பது, திறன் மேம்பாடு, தங்குமிடம் மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றாா் அவா்.