அமெரிக்க வரி விதிப்பால் ஆந்திரத்தில் இறால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 50% வரியால், ஆந்திர மீன் வளத்துறை கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும், இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மீன்வளத் துறை ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
இதில், அமெரிக்க வரி விதிப்பு ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் இத்துறையில் மட்டும் ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 50% ஏற்றுமதி முன்பதிவுகள் ரத்தாகியுள்ளன.
ஏற்றுமதியாகியுள்ள 2,000 கன்டெய்னர்களுக்கு ரூ.600 கோடி வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த இறால் ஏற்றுமதியில் 80% ஆந்திரத்தில் நடப்பதாகவும், கடல் சார் பொருள்கள் ஏற்றுமதியில் 34% ஏற்றுமதியாவதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ. 21,246 கோடி என்றும் இதனை நம்பி 2.5 லட்சம் குடும்பங்கள் உள்ளதாகவும் மீன்வளர்ப்புத் துறையை நம்பியிருக்கும் பிற துறைகள் என 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன் வளர்ப்புத் துறையை நம்பியுள்ளவர்களுக்கு உதவும் வகையில், அதன் தீவன விலையை உற்பத்தியாளர்களிடமிருந்து கிலோவுக்கு ரூ.9 ஆக குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இத்துடன் மீன் வளர்ப்பவர்களிடமிருந்து நேரடியாக சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கும் வகையில் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்றும் இதற்காக தனிக் குழுவை அமைக்க ஆந்திர அரசு தயாராக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் கடல் உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் அதில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் சத்துகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிக்க | சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.