மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு மர்ம நபர்களால் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டதால் சுராசந்த்பூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு நேற்று சென்றிருந்தார்.
இதற்கு மறுநாளே குகி தேசிய அமைப்பின் தலைவரான கால்வின் அகெந்தாங்கின் வீடு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று, குகி இனத்தின் மற்றொரு இயக்கமான குகி ஸூ கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கின்சா வுல்சோங் இல்லத்திற்கும் கிளர்ச்சியாளர்கள் தீ வைக்க முயன்றுள்ளனர். ஆனால், அப்பகுதியிலிருந்த மக்களின் உதவியால் இச்சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும், ஒருமைப்பாட்டை பேணிக்காக்கும் வகையிலும் குகி தேசிய அமைப்பு மற்றும் குகி ஸூ கவுன்சில் ஆகிய இரு குழுக்களும் செயல்பாடுகளை நிறுத்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும், அமைதியைக் கொண்டுவருவதற்காக பதற்றமான பகுதிகளில் இருந்து தங்கள் கூடாரங்களை காலி செய்தன.
மேலும், குகி ஸூ கவுன்சில் மக்கள் தொடர்புக் குழு மணிப்பூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை திறக்க ஒப்புக்கொண்டன. இதன்மூலம், மாநிலத்தில் மைதேயி இனமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சரக்கு மற்றும் போக்குவரத்து வாகனங்கள் அந்தச் சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்தக் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மைதேயி மற்றும் குகி இனக் குழுக்களிடையே எந்தவொரு தீர்வு அல்லது ஒப்பந்தமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இருதரப்பில் இருந்து யாரும் இதுவரை எல்லைத் தாண்டவில்லை.
கூகி ஸு கவுன்சில் யாருடைய வருகையாக இருந்தாலும் அதனை வரவேற்கிறது. ஆனால், வரம்புகளை மீறி அவர்கள் நடந்துகொண்டால், அதற்கான விளைவுகளால் அமைதியும் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.