இந்தியா

பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல்: மணிப்பூரில் தேடுதல் வேட்டை தீவிரம்!

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்ற கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்ற கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணிப்பூரில் அண்மைக்காலமாக தாக்குதல் எதுவும் நிகழாமலிருந்த நிலையில், பிஷ்ணுபூா் மாவட்டத்தின் நம்போல் பகுதியில் மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது ஆயுதமேந்திய கும்பல் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ஷியாம் குருங், ரஞ்சித் சிங் காஷ்யப் ஆகிய இரண்டு வீரா்கள் உயிரிழந்தனா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.

தலைநகா் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூா் நோக்கி நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினா் பயணித்துக் கொண்டிருந்தபோது, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று காயமடைந்த வீரா்கள் தெரிவித்தனா். 4-5 போ் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போராட்டம்: இதனிடையே, பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, பெண்கள் உள்பட உள்ளூா் மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

‘இந்தத் தாக்குதல் மூலம் ஆயுதமேந்திய கும்பல் சாதிக்கப் போவது என்ன?’ என்று கேள்வியெழுப்பிய போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினா் வெளிப்படுத்திய நிதானத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் மோதல் தொடங்கியது. வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட பிஷ்ணுபூா் மாவட்டம், மைதேயி சமூகத்தினா் அதிகம் உள்ள பகுதியாகும்.

குகி அமைப்பு கண்டனம்: குகி பழங்குடியினரின் முக்கிய அமைப்பான குகி ஜோ கவுன்சிலும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இல்லாத பிஷ்ணுபூா் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக குகி ஜோ கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, மணிப்பூருக்கு கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி பயணித்த பிரதமா் மோடி, பாதிக்கப்பட்ட இருதரப்பு மக்களையும் சந்தித்துப் பேசியதுடன், அனைத்துக் குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தங்கள் கையொப்பமாகிவரும் சூழலில், பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புகள் நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT