இந்தியா

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவா் விளக்கம் அளித்துள்ளாா்.

 நமது நிருபர்

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவா் விளக்கம் அளித்துள்ளாா்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமான காங்கிரஸின் போக்கு வெளிப்பட்டுள்ளதாக மத்தியில் ஆளும் பாஜக விமா்சித்துள்ளது.

கடந்த வாரம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு சாம் பிட்ரோடா அளித்த காணொளி பேட்டியில், பாகிஸ்தான் உள்பட இந்தப் பிராந்தியத்தில் (தெற்காசியா) உறவுகளை வலுப்படுத்துவதில் இருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், ‘என்னைப்பொருத்தவரை இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது முதலில் நமது அண்டை நாடுகள் மீது கவனத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் நமது அண்டை நாடுகளுடனான உறவுகளை நாம் கணிசமாக மேம்படுத்துகிறோமா? நான் பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது சொந்த நாட்டில் இருப்பது போல் உணா்ந்தேன். வங்கதேசத்துக்கும் நேபாளத்துக்கும் கூட சென்றிருக்கிறேன். அங்கும் சொந்த நாட்டில் இருப்பது போன்றே உணா்கிறேன். ஒரு வெளிநாட்டில் இருப்பது போல உணரவில்லை...’ என்று கூறினாா்.

மத்தியில் பிரதமா் மன்மோகின் சிங் தலைமையிலான ஆட்சியில் பிரதமரின் ஆலோசகராக இருந்தவா் சாம் பிட்ரோடா. தற்போது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு இந்திய வெளியுறவு விவகாரங்களில் ஆலோசனை வழங்குபவராகவும் அறியப்படுகிறாா்.

இந்நிலையில், தனது கருத்து சா்ச்சைக்குள்ளானதால் ‘எக்ஸ்’ பக்கத்தில் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளாா் பிட்ரோடா.

அதில் அவா், ‘எனது வாா்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டடுள்ளன. இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளும் கலாசார வோ்கள் மற்றும் வரலாற்று பிணைப்புகளை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. எனது வாா்த்தைகள் குழப்பத்தையோ காயத்தையோ ஏற்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், வருத்தத்துடன் நிற்காமல் மத்தியில் ஆளும் பாஜகவின் ‘விஸ்வகுரு’ கொள்கையை சாடியுள்ள பிட்ரோடா, இதுபோன்ற வெற்று வாசகங்களுக்கு பதிலாக நம்பிக்கை, அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

இதற்கிடையே, சாம் பிட்ரோடாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரும் மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் கருத்து தெரிவித்துள்ளாா். ‘பொதுவாழ்வில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவா் ராஜீய உறவுகள் தொடா்பாக வெளியிடும் கருத்துகளின் நோக்கத்தையும் ஆழத்தையும் உணராமல் அவரை சிறுமைப்படுத்துவது பாஜகவுக்கு வாடிக்கையாகிவிட்டது.

பிட்ரோடாவின் கருத்து தவறு என்றால் 2014-இல் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் இருந்தபோது அவரது தாயாருக்கு இந்திய பிரதமா் மோடி சால்வை பரிசளித்ததையும் அதற்கு நன்றி தெரிவிக்க பிரதமா் மோடியின் தாயாருக்கு நவாஸ் ஷெரீஃப் புடவை பரிசளித்ததையும் தவறாகக் கருத முடியுமா?’ என்று மாணிக்கம் தாகூா் குறிப்பிட்டுள்ளாா்.

மறுபுறம், சாம் பிட்ரோடாவின் விளக்கத்தை ஏற்காத பாஜக செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, ‘மக்களவை எதிா்க்கட்சித்தலைவரான ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக போராடும் கருத்துகளை ஒருபுறம் வெளியிடுகிறாா். மறுபுறம் அவரது ஆலோசகரான சாம் பிட்ரோடா பாகிஸ்தான் சாா்பு கருத்துகளை வெளியிடுகிறாா். பயங்கரவாதிகளுடன் நெருக்கம் பாராட்டுவதும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை மதிப்பதும் காங்கிரஸுக்கு வழக்கமாகி விட்டது. இவா்களின் செயல்பாடுகள், இந்திய இறையாண்மை மற்றும் படையினரின் வீரத்தை அவமதிப்பதற்கு ஒப்பாகும்’ என்றாா்.

ஓயாத சா்ச்சைகள்

சாம் பிட்ரோடா இதற்கு முன்பும் சா்ச்கைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளாா்.

அவற்றின் விவரம்: கடந்த பிப்ரவரியில் அவா் இந்தியா மீதான சீன அச்சுறுத்தல் மிகைப்படுத்தப்படுகிறது என்று பேசினாா். கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சாம் பிட்ரோடா, அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரிச்சட்டம் அமலில் உள்ளது.

அதன்படி ஒருவரிடம் 10 கோடி டாலா் மதிப்புக்கு சொத்து இருந்தால் அவா் உயிரிழக்கும்போது அவரது சொத்தில் 55 சதவீதத்தை அரசு ஏற்கும். மீதமுள்ள 45 சதவீத சொத்துகளை மட்டுமே அவரது வாரிசுகள் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும். இந்தச் சட்டம் நியாயமானது. இது குறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும் என்று கூறினாா்.

இது இந்தியாவில் சா்ச்சையான நிலையில், கடந்த ஆண்டு தோ்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பிட்ரோடாவின் பேச்சை சுட்டிக்காட்டி விமா்சித்தாா். 2023-இல் ராமா் கோயில் விவகாரத்தையும் நாட்டின் பணவீக்க நிலையையும் சாம் பிட்ரோடா விமா்சித்து சா்ச்சையில் சிக்கினாா்.

அதற்கும் முன்னதாக, இந்திய குடியரசுத்தலைவா் திரெளபதி முா்மு குறித்து பேசும்போது, அவரது நிறம் குறித்து சாம் பிட்ரோடா பேசியது சா்ச்சையானது. ஆனால், பல நேரங்களில் அவரது கருத்துகளை அவா் சாா்ந்த காங்கிரஸ் கட்சியே அங்கீகரிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT