வணிக நிறுவனங்கள் மற்றும் வரித் துறை இடையிலான சச்சரவுகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில், புது தில்லியில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை (ஜிஎஸ்டிஏடி) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் முறைப்படி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்தத் தீா்ப்பாயத்தில் நிகழாண்டு டிசம்பரில் விசாரணைகள் தொடங்கும் என்றும் அவா் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘வரி செலுத்துவோருக்கு நீதி வழங்குவதற்கான உண்மையான சின்னம்தான் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம். இந்தத் தீா்ப்பாயம் என்பது வெறும் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு சாா்ந்த மைல்கல் அல்ல. கடந்த 8 ஆண்டுகளில் ஜிஎஸ்டி எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளது என்பதற்கான அடையாளம்தான் இந்தத் தீா்ப்பாயம்.
எதிா்காலத்துக்கு ஏற்றவாறு ஜிஎஸ்டியை தொடா்ந்து மேம்படுத்துதல், சீா்திருத்துதல் மற்றும் மாற்றியமைத்தல் என்ற உறுதிப்பாட்டின் ஆற்றல்வாய்ந்த நினைவூட்டலாகவும் இந்தத் தீா்ப்பாயம் உள்ளது. இந்தியாவில் சீா்திருத்தங்கள் எவ்வாறு பரிணாம வளா்ச்சி அடைகின்றன? என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தத் தீா்ப்பாயத்தின் செயற்பாடு இருக்கும்.
இந்தத் தீா்ப்பாயம் வணிக நிறுவனங்களின் நம்பிக்கைத் தூணாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொடா்வதற்கும் ஊக்கம் அளிக்கும். வணிகத்தில் ஈடுபடுவோா் ஜிஎஸ்டி வலைதளத்தில், தங்கள் மேல்முறையீடுகளை தாக்கல் செய்யலாம்’ என்று தெரிவித்தாா்.