உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 29 ஸ்டீல் ஸ்பூன், 19 டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தில் இந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாப்பூரில் வசித்துவருபவர் 35 வயதான சச்சின். போதைப்பொருளுக்கு அடிமையான இவர் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார். அங்கு அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவரது வயிற்றை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ந்துபோனார்கள்.
அவரது வயிற்றில் இரண்டு பேனாக்கள், 29 ஸ்டீல் ஸ்பூன்கள், 19 பல் துலக்கும் பிரஷ்கள் இருப்பது கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் அகற்ற முயற்சித்தனர். ஆனால் வயிற்றில் அதிகளவிலான பொருள்கள் இருந்ததால் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அவற்றை வெளியேற்றினர்.
இதுதொடர்பாக சச்சினிடம் மருத்துவர்கள் விசாரித்தனர். மறுவாழ்வு மையத்தில், தினமும் அவருக்குச் சிறிதளவு உணவு, கொஞ்சம் காய்கறி, ஒரு சில சப்பாத்திகள் மட்டும் வழங்கப்படுகிறது. அவரது வீட்டிலிருந்து கொடுத்து அனுப்பும் எந்தவித உணவும் அவருக்கு போய் சேருவதில்லை. சில நேரங்களில் ஒரு பிஸ்கட் மட்டுமே வழங்கப்படுகிறது.
பசி தாளாமல் கோபமடைந்த அந்த இளைஞர், கரண்டி மற்றும் பிரஷ்களைத் திருடி அதைக் குளியலறைக்குக் கொண்டுசென்று, அவற்றைத் துண்டுகளாக உடைத்து வாயில் வைத்து தொண்டையில் திணிப்பாராம், சில சமயங்களில் தண்ணீர் ஊற்றி விழுங்குவாராம்.
பெரும்பாலும் உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இதுபோன்று ஏற்படுவதுண்டு என்று சச்சினுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவர் டாக்டர் ஷியாம் குமார் கூறினார்.
இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.