இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு, சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இன்று பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வான் பாதுகாவலன் என்ற அடையாளத்தோடு, விமானப் படையில் சேர்க்கப்பட்ட மிக்-21 போர் விமானம், ‘கார்கில்’ போர் முதல், கடைசியாக நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரை நாட்டின் எல்லையைக் காக்க பணியாற்றியுள்ளது.
விண்வெளி குழுவுக்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, போர் விமானியாக இருந்த இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா இந்த மிக்-21 போர் விமானம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் பேசும்போது, “நான் அதை எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன். நீங்கள் பறக்கும் விமானத்துடனே உங்கள் வாழ்க்கையும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.
என்னைப் பொருத்தவரை விமானத்துடன் என வளர்ச்சியின் தனிப்பட்ட பயணமாகும். விமானத்தை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த விமானங்கள் மீது பல்வேறு விமர்சங்கள், உயிரிழப்புகள் இருந்தாலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப் படையில் தன்னிகரில்லாத இடத்தைப் பெற்றிருந்தது மிக்-21. இந்த விமானங்களில் விண்வெளி வீரர்கள், பயிற்சி விமானிகள், விமானப்படைத் தளபதிகள் என பலரும் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.