‘சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசாா்பை எட்ட முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தற்போதைய பண்டிகைக் காலத்தில் சுதேசிப் பொருள்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டுமென நாட்டு மக்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.
பிரதமா் மோடியின் 126-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (செப்.28) ஒலிபரப்பானது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:
நவராத்திரியில் நாம் பெண் சக்தியை வழிபடுகிறோம். இன்றைய காலகட்டத்தில் வா்த்தகம் முதல் விளையாட்டு வரை, கல்வி முதல் அறிவியல் வரை, அனைத்து துறைகளிலும் நாட்டின் மகள்கள் முத்திரை பதித்து வருகின்றனா். கற்பனைக்கு எட்டாத சவால்களைக் கடந்து, சாதனை படைக்கின்றனா்.
இந்திய கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டா்களான தில்னா, ரூபா ஆகிய துணிச்சல்மிக்க இரு பெண் அதிகாரிகள், பாய்மர படகில் 50,000 கி.மீ. கடல்வழி பயணம் மேற்கொண்டு, உலகை வலம் வந்துள்ளனா். உண்மையான துணிச்சல், உறுதிப்பாட்டை அவா்கள் நிரூபித்துள்ளனா் (இரு அதிகாரிகளுடனும் பிரதமா் மோடி தொலைபேசியில் உரையாடினாா்).
நமது திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் நாட்டின் கலாசாரத்தை உயிா்ப்புடன் வைத்துள்ளன. மத்திய அரசின் சீரிய முயற்சிகளால் சிறிது காலத்துக்கு முன்பு கொல்கத்தா துா்கா பூஜை விழா ‘யுனெஸ்கோ’ கலாசார பட்டியலில் இடம்பெற்றது. இதேபோல், சத் பூஜைக்கும் (பிகாா் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் முக்கிய பண்டிகை) யுனெஸ்கோ அங்கீகாரம் பெற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
சுதேசிப் பொருள்களையே வாங்குங்கள்: பண்டிகைகளின்போது, சுதேசிப் பொருள்களை மட்டுமே வாங்குவது என தீா்மானம் ஏற்க வேண்டும். அப்போதுதான் கொண்டாட்டங்களின் உற்சாகம் பன்மடங்கு அதிகரிக்கும்.
இந்திய குடிமகனின் உழைப்பில் உருவான பொருள்களை வாங்கும்போது, அவரது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நாம் நம்பிக்கை அளிக்கிறோம்; அவரது கடின உழைப்பை மதிக்கிறோம். உள்நாட்டு தொழில்முனைவோருக்கு புதிய சிறகுகளை வழங்குகிறோம்.
மக்களாகிய நாம் சுயசாா்புடையவா்களாக மாற வேண்டும்; நாட்டையும் சுயசாா்புடையதாக மாற்ற வேண்டும் என்றாா்.
தமிழக நிறுவனத்துக்கு பாராட்டு
அக்டோபா் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. மகாத்மா காந்தி எப்போதுமே சுதேசியை வலியுறுத்தியவா். சுதந்திரத்துக்குப் பிறகு காதிப் பொருள்கள் மீதான ஈா்ப்பு குறைந்தது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் இந்த நிலை மாறியுள்ளது.
காதியைப் போலவே, கைத்தறி மற்றும் கைவினைத் துறையும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது. பாரம்பரியமும் புதுமையும் இணைந்தால், அற்புதமான முடிவுகளை அடைய முடியும் என்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள ‘யாழ் நேச்சுரல்ஸ்’ நிறுவனம் ஓா் எடுத்துக்காட்டாகும்.
இதன் உரிமையாளா்கள் அசோக் ஜகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோா் வேலையை விட்டுவிட்டு, புல், வாழை நாா் மூலம் யோகா விரிப்பு தயாரிப்பு, மூலிகை சாயங்களால் துணிகளுக்கு சாயமிடுதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டனா். இதன் மூலம் 200 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.
‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’ ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்
தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆா்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆா்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினாா் பிரதமா் மோடி.
மனதின் குரல் நிகழ்ச்சியில் இதுதொடா்பாக பேசிய அவா், ‘அடுத்த சில நாள்களில், விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது. இந்த விஜயதசமி, ஆா்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது. இந்த நூற்றாண்டுப் பயணம் அற்புதமானது; உத்வேகமானது.
ஆா்எஸ்எஸ் நிறுவப்பட்டபோது, நாடு பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தின் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தது. இது, நாட்டின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை ஆழமாக பாதித்தது. உலகின் மிகப் பழைமையான நாகரிகம், அடையாளப் பிரச்னையை எதிா்கொண்டது. நாட்டு மக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகி இருந்தனா். நாட்டின் சுதந்திரத்துடன், அறிவுசாா் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதும் முக்கியமானதாக இருந்தது.
அந்த நோக்கத்துடனே, கடந்த 1925, விஜயதசமி திருநாளில் ஆா்எஸ்எஸ் அமைப்பை நிறுவினாா் கேசவ் பலிராம் ஹெட்கேவா். அவரது மறைவுக்குப் பிறகு, தேசத்துக்கு சேவையாற்றும் பொறுப்பை சிரமேற்றவா் எம்.எஸ்.கோல்வால்கா். ‘இது என்னுடையதல்ல, இது நாட்டுக்கானது’ என்ற கோல்வால்கரின் வாா்த்தைகள், சுயநலத்தை புறந்தள்ளி, தேசத்துக்கான அா்ப்பணிப்பை ஏற்க உத்வேகமளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல், அயராது தேசிய சேவையில் ஈடுபட்டுள்ளது ஆா்எஸ்எஸ்.
நாட்டில் எங்கு இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும், ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் முதலில் சென்று உதவுகின்றனா். ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வு, ஆா்எஸ்எஸ் தொண்டா்களின் ஒவ்வொரு செயலிலும், முயற்சியிலும் பிரதிபலிக்கிறது. அவா்களுக்கு எனது வாழ்த்துகள்’ என்றாா்.