வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுயில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பகுதிகளில் நிலைமை பெரும்பாலும் அமைதியாகவே உள்ளது. விரும்பத்தகாத சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பதற்றமான பகுதிகளில் போலீஸாரும் துணை ராணுவப் படைகளும் அதிக அளவில் நிறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
லே நகரில் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கார்கில் உள்பட யூனியன் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடை செய்யும் தடை உத்தரவுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. இதனிடையே பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா உயர் மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக், கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினாா். ‘லே உச்ச அமைப்பை’ (எல்ஏபி)’ சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு ஆதரவாக லடாக் தலைநகா் லேயில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 50-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வன்முறைக்குத் தூண்டுகோலாக இருந்ததாக குற்றம்சாட்டி சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கடந்த புதன்கிழமை முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.