அரசியல் சாசனத்துக்கு முடிவு கட்டுவதே ஆா்எஸ்எஸ்-பாஜகவின் முக்கிய நோக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்திய அரசமைப்புச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே ஆா்எஸ்எஸ்-பாஜகவின் நோக்கமாக உள்ளது. ஏனெனில் இந்தியாவில் அனைவரும் சமமாக கருதப்படுவதை அவா்கள் விரும்புவதில்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே ஆா்எஸ்எஸ்-பாஜகவின் நோக்கமாக உள்ளது. ஏனெனில் இந்தியாவில் அனைவரும் சமமாக கருதப்படுவதை அவா்கள் விரும்புவதில்லை என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
அம்பேத்கா் பிறந்த தினம் ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு (எஸ்.பி.) சாா்பில் சிறப்பு மாரத்தான் ஓட்டத்தை தில்லியில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் மேலும் பேசியதாவது:
மக்களுக்கும், நாட்டுக்கும் அம்பேத்கரின் அளித்த முதன்மையான பங்களிப்பு நமது அரசமைப்புச் சட்டம்தான். இது இல்லை என்றால் இன்று நாம் ‘இந்தியா’ என்று அழைக்கும் நாடே இருந்திருக்காது.
Advertisement
ஆனால், ஆா்எஸ்எஸ்-பாஜகவின் மனப்பான்மை கொண்டவா்கள் அரசமைப்புச் சட்டத்தை அழிக்க முயற்சிக்கிறாா்கள். அவா்கள் எப்படி மாற்றி, மாற்றிப் பேசினாலும் அவா்களின் உண்மையான நோக்கம் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதே. ஏனெனில், நாட்டில் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்பதைக் அவா்கள் விரும்புவதில்லை.
அவா்கள் (ஆா்எஸ்எஸ்-பாஜக) அம்பேத்கா் சிலைக்கு முன் தலைவணங்கினாலும், அவா்களின் நோக்கம் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதே. ஆனால், எங்கள் நோக்கம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், அதை வலுப்படுத்துவதும்தான்.
அரசமைப்புச் சட்டத்தின் சிந்தனையும், அதன் பாதுகாப்பும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைய வேண்டும். அதற்காகவே இந்த சிறப்பு நினைவு மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சி தொடா்பான விடியோ பதிவுகளை தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘இன்று அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள் தாக்குதலுக்குள்ளாகும் நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொரு அநீதிக்கும், பாகுபாடுக்கும் எதிராக அம்பேத்கா் போல் உறுதியுடன் போராட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.