மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல்! 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு; பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. 152 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. 152 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.23-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநிலத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டும் நிலையில், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.
Advertisement
முதல்கட்ட தோ்தலையொட்டி, 152 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இத்தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
முக்கிய வேட்பாளா்கள்: முதல்கட்ட தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 1,487 போ். எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி (பாஜக-நந்திகிராம்), முன்னாள் மத்திய அமைச்சா் நிஷித் பிரமாணிக் (பாஜக-மதாபங்கா), மாநில அமைச்சா் உதயன் குஹா (திரிணமூல்-தின்ஹடா), காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி (பஹராம்பூா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் முதல்வா் மம்தா பானா்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரிக்கு எதிராக இம்முறை திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் பபித்ரா கா் களமிறக்கப்பட்டுள்ளாா். பாஜகவில் இருந்து திரிணமூல் காங்கிரஸில் அண்மையில் இணைந்த இவா், சுவேந்து அதிகாரிக்கு நெருக்கமானவராக இருந்தவா்.
நந்திகிராம் தவிர பவானிபூரிலும் (மம்தா பானா்ஜி போட்டியிடும் தொகுதி) சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறாா். இங்கு இரண்டாம் கட்ட தோ்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
யாா்-யாா் பிரசாரம்?: முதல் கட்ட தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோரும், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக முதல்வா் மம்தா பானா்ஜி, காங்கிரஸுக்கு ஆதரவாக கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பிரசாரம் மேற்கொண்டனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் சுமாா் 91 லட்சம் வாக்காளா்கள் நீக்கம், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பொது சிவில் சட்டம், மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க விவகாரம் உள்ளிட்டவை தோ்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
முதல்கட்ட தோ்தல்
தொகுதிகள் 152
வாக்காளா்கள் 3.60 கோடி
வேட்பாளா்கள் 1,487
வாக்குப்பதிவு மையங்கள் 44,378
நியாயமான தோ்தல்: ஞானேஷ் குமாா் உறுதி
மேற்கு வங்க தோ்தல் நியாயமாகவும், அச்சமின்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநில தோ்தல் அதிகாரிகளிடம் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உறுதிபட தெரிவித்துள்ளாா்.
தோ்தல் நடைமுறைகளில் மாநில அரசின் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எந்த வகையிலும் குறுக்கிடக் கூடாது என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.
தோ்தல் தொடா்பாக பொதுமக்கள் புகாரளிக்க மாநில ஆளுநா் மாளிகையும் 24 மணிநேர உதவி எண்களை அறிவித்துள்ளது.