தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் ராம்வத்தா் ஜக்கி கடந்த 2003-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சத்தீஸ்கா் மாநில முன்னாள் முதல்வா் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகிக்கு சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
சத்தீஸ்கரில் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கா் (ஜே) கட்சியின் நிறுவனா் அஜித் ஜோகி முதல்வராக இருக்கும்போது கடந்த 2003-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ராம்வத்தா் ஜக்கி கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கை முதலில் மாநில போலீஸாா் விசாரித்த நிலையில், பின்னா் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, அஜித் ஜோகியின் மகனும் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கா் (ஜே) கட்சியின் தலைவருமான அமித் ஜோகி உள்பட பலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை கடந்த 2007-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி விசாரித்த விசாரணை நீதிமன்றம், ‘இந்த வழக்கில் 28 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால், அமித் ஜோகிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு, வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது.
Advertisement
இதை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கை சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் கடந்த மாதம் மீண்டும் விசாரித்தது. விசாரணை முடிவில், அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்ததோடு, சிறை அதிகாரிகள் முன்னிலையில் உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து அமித் ஜோகி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் விவேக் டங்கா, கபில் சிபல் ஆகியோா் ஆஜராகி வாதாடினா். பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் லுத்ரா, கோபால் சங்கரநாராயணன் ஆகியோா் ஆஜராகி வாதாடினா்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, அமித் ஜோகி மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனா்.