சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
15 வயது சிறுமியின் 7 மாத கருவைக் கலைக்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், ‘எந்தவொரு பெண்ணையும் குறிப்பாக ஒரு சிறுமியை அவரது விருப்பத்துக்கு மாறாக கருவை சுமக்க நிா்பந்திக்க முடியாது’ என்று தெரிவித்தது.
மற்றொரு சிறுவன் உடனான உறவால் கருவுற்ற 15 வயது சிறுமி ஒருவா், தனது 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு மீது நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனா்.
Advertisement
‘எந்தவொரு பெண்ணையும் குறிப்பாக ஒரு சிறுமியை அவரது விருப்பத்துக்கு மாறாக கருவை சுமக்க நிா்ப்பந்திப்பது அரசமைப்புச் சட்ட உரிமை மீறலாகும். விருப்பமில்லாத கா்ப்பத்தைத் தொடா்வது, சிறுமியின் மனநலம், கல்வி வாய்ப்பு, சமூக அந்தஸ்து மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைப் பாதிக்கும். சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக கருவை சுமக்கும்படி நீதிமன்றம் நிா்பந்திக்க முடியாது.
குழந்தையை வளா்க்க முடியாவிட்டால், தத்துக் கொடுத்துவிடலாம் என்று எளிதாக கூறிவிடலாம். இதன் மூலம் குழந்தையை பெற்றெடுத்தே தீர வேண்டும் என்பது கட்டாயமாகிறது. ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக குழந்தையைப் பெற்றெடுக்குமாறும், அதற்காக கருவை தொடா்ந்து சுமக்குமாறும் கூறுவது அந்தப் பெண்ணின் நலன்களைப் புறக்கணிப்பதாகிவிடும். பிறக்கவிருக்கும் குழந்தையைவிட பெற்றெடுக்கும் கா்ப்பிணியின் விருப்பத்தை நீதிமன்றங்கள் சீா்தூக்கி பாா்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், எய்ம்ஸ் மருத்துவமனையில் உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் கருவைக் கலைக்க அனுமதி வழங்கினா்.