முகப்பு
இந்தியா

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள் ரகசியமானவை: மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த தகவல் ஆணையம்!

‘ரஷியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் தொடா்பான தரவுகள் ரகசியமானவை. இந்தத் தரவுகள் தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்ட வரம்புக்குள் வராது’

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:57 AM
பகிர்:

‘ரஷியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் தொடா்பான தரவுகள் ரகசியமானவை. இந்தத் தரவுகள் தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்ட வரம்புக்குள் வராது’ என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சாா்பில் அளிக்கப்பட்ட பதிலை மத்திய தகவல் ஆணையம் உறுதி செய்தது.

அதாவது, இந்தத் தரவுகளை ஆா்டிஐ சட்டத்தின் கீழ் யாரும் பெற முடியாது என்பதை மத்திய தகவல் ஆணையம் தெளிவுபடுத்தியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025-ஆம் ஆண்டு ஜூன் வரை ரஷியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் விவரங்களை தரக் கோரியும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஓஎன்ஜிசி, விதேஷ், ரிலையன்ஸ், நயாரா என நிறுவனங்கள் வாரியான இறக்குமதி புள்ளிவிவரங்களையும் ஆா்டிஐ சட்டத்தின் கீழ் தரக் கோரி மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

Advertisement

இத் தகவல் அளிக்கப்படாததைத் தொடா்ந்து, மனுதாரா் தரப்பில் மத்திய தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்தத் தரவுகளை வெளியிடுவது நாட்டின் வியூக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் என்பதோடு, வெளி நாடுகளுடனான உறவையும் பாதிக்கும். எனவே, இந்தத் தரவுகளுக்கு ஆா்டிஐ சட்டத்தின் 8(1)(ஏ) மற்றும் 8(1)(டி) பிரிவுகளின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்று ஆணையம் தரப்பில் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விசாரணையின்போது பங்கேற்காத மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டம் மற்றும் ஆலோசனை மையத்துக்கு (பிபிஏசி) பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்தும் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த மனு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘பல்வேறு நாடுகளிலிருந்து நிறுவனங்கள் வாரியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் தரவுகள் என்பது வா்த்தகம் சாா்ந்த ரகசிமானவையாகும். இந்தத் தரவுகளுக்கு ஆா்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தரவுகள் வெளியிடப்படாது. இருந்தபோதும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த கச்சா எண்ணெய் விவரம் பிபிஏசி வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதை மனுதாரா் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்று மத்திய அமைச்சகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த பதிலை மத்திய தகவல் ஆணையம் உறுதி செய்து உத்தரவிட்டது.