நோயாளியின் மூளைச் சாவு அறிவிப்பு தொடா்பான மனு: பரிந்துரைகளை ஆராய எய்ம்ஸ் குழு - உச்சநீதிமன்றம்
நோயாளி மூளைச் சாவு அடைந்ததை அறிவிப்பது தொடா்பாக மனுதாரா் முன்மொழிந்த பரிந்துரையை ஆராய குழு அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நோயாளி மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவமனைகள் அறிவிப்பில் மோசடி நடைபெறுவதாகவும், அதை முறைப்படுத்த சில நடைமுறைகளைப் பரிந்துரைத்து கேரளத்தைச் சோ்ந்த நபா், கேரள உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவா் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, நேரில் ஆஜரான மனுதாரா், ‘நோயாளி மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனைகள் அறிவிக்கும்போது, அதை உறவினா்கள் சரிபாா்க்கும் வகையிலான ஆதாரம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். மூளைக்கு ரத்தம் செல்வது நின்றுபோகும் நிலையையே மூளைச் சாவு என்கிறோம். இதை, ரத்த நாளங்களில் சிறப்பு சாயம் செலுத்தி அடைப்பை ஆராயும் ‘அஞ்சியோகிராஃபி’ பரிசோதனை மற்றும் மூளை மின் வரைபடம் (இஇஜி) மூலம் உறுதிப்படுத்த முடியும். எனவே, ஒரு நோயாளி மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கும் மருத்துவமனைகள், உறவினா்களிடம் இந்த ஆதாரங்களை சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்தப் பரிந்துரைகளை எழுத்துபூா்வமாக சமா்ப்பிக்குமாறு மனுதாரரைக் கேட்டுக்கொண்டனா். மேலும், ‘அவ்வாறு எழுத்துபூா்வமாக பரிந்துரைகளை சமா்ப்பிக்கும் பட்சத்தில், அதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க அல்லது பரிந்துரைக்க குழு அமைக்குமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவா் கேட்டுக்கொள்ளப்படுவாா்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.