முகப்பு
இந்தியா

பட்ஜெட்டில் ஏன் கேரளத்தைப் புறக்கணித்தீர்கள்? - பினராயி விஜயன்

பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு! -பினராயி விஜயன்

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 3:01 PM
பினராயி விஜயன்
பகிர்:

மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கேரளம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற முக்கிய குற்றச்சாட்டை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சுமத்தியுள்ளார்.

இன்று(பிப். 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கேரளத்துக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்ற விமர்சனத்தை முன்வைத்துப் பேசிய பினராயி விஜயன் : “கேரளத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசின் போக்கையே இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் காட்டுகிறது.

மாநில அரசு நெடுங்காலமாக முன்வைத்துவரும், எய்ம்ஸ் மருத்துவமனை, அதிவேக ரயில் வழித்தடங்கள், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கான சிறப்பு நிதித் தொகுப்பு உள்பட முக்கிய கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கேரளத்துக்கான நிதி ஆணையத்தின் நிதி விடுவிப்பை அதிகரிக்கச் செய்யாததும், தொடர்ந்து அதே 41 சதவீத நிதிப்பங்களிப்பே தொடருமென்பதும் ஒன்றிய கொள்கைகளை கேள்விக்குறியாக்குகின்றன. பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கான விளக்கத்தை, இங்கிருந்து மத்திய அமைச்சர்களாகியிருப்பவர்கள் தர வேண்டும்.

பெரும் முதலாளிகளுக்கு ஊக்குவிப்பளிக்கும் பொருளாதார கோட்பாட்டுடன் இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மிகுந்த வறுமைக்குள் தள்ளப்படும் நோக்கத்தில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பட்ஜெட்டில் கேரளம் முற்றிலும் விடுபட்டுவிட்டதாக காங்கிரஸ் எம்.சி. சசி தரூரும் குற்றம்சாட்டியிருக்கிறார். பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை, குறிப்பாக மேற்குவங்க மாநிலத்திற்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் ஏதுமில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கனிமொழி எம்.பி.யும், பட்ஜெட்டில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தியும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Kerala CM Vijayan criticises Union Budget for cuts, corporate bias and neglect of Kerala

முழு கட்டுரையைப் படிக்க →