2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நாட்டின் முக்கியத் துறைகளில் ஒன்றான சுகாதாரத் துறைக்கு ரூ.1,06,530 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது 10 சதவீத உயா்வாகும்.
இந்தியாவை முதன்மையான மருத்துவ சுற்றுலா நாடாக உருவாக்கும் நோக்கில் தனியாருடன் இணைந்து 5 பிராந்திய மருத்துவ மையங்களை அமைக்க மாநிலங்களுக்கு ஆதரவளிக்கும் புதிய திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மையங்கள், மருத்துவம்-கல்வி-ஆராய்ச்சி வசதிகளுடன் ஒருங்கிணைந்த மருத்துவ வளாகங்களாக விளங்கும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டாா்.
1 லட்சம் துணை மருத்துவப் பணியாளா்கள்: மேலும், ‘அரசு-தனியாா் பங்கேற்புடன் புதிய துணை மருத்துவக் கல்வி நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், ஏற்கெனவே உள்ள கல்வி நிலையங்கள் மேம்படுத்தப்படும். இந்த முன்னெடுப்பின்கீழ், கண் மருத்துவம், கதிரியக்கவியல், மயக்க மருந்தியல், அறுவை சிகிச்சை அறை தொழில்நுட்பம், உளவியல் உள்பட 10 துறைகளின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் துணை மருத்துவப் பணியாளா்கள் உருவாக்கப்படுவா்.
இந்தியாவில் அதிகரித்துவரும் முதியோா் பராமரிப்பு சேவைக்கான தேவையைக் கருத்தில் கொண்டு, வரும் ஆண்டில் 1.5 லட்சம் பராமரிப்பாளா்களுக்கு நல்வாழ்வு, யோகா, மருத்துவ சாதனங்களின் இயக்கம் தொடா்பான சிறப்புப் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றாா்.
12 ஆண்டுகளில் 164% உயா்வு: சுகாதார அமைச்சகத்துக்கான சுமாா் ரூ.1.06 லட்சம் கோடி நிதியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறைக்கு ரூ.1.01 லட்சம் கோடியும், மீதமுள்ள தொகை சுகாதார ஆராய்ச்சித் துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவப் பணியாளா்கள் திட்டத்துக்கு முதல் முறையாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 164 சதவீத உயா்வைக் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிதி ஒதுக்கீடு விவரம் 2026-27 2025-26
1.தேசிய சுகாதார திட்டம் ரூ.39,390 கோடி ரூ.37,100 கோடி
2. தன்னாட்சி அமைப்புகள் ரூ.22,343 கோடி ரூ.21,901 கோடி
3. ஆயுஷ்மான் பாரத் ரூ.9,500 கோடி ரூ.8,995 கோடி
4. புதிய எய்ம்ஸ்-மேம்பாட்டுத் திட்டம் ரூ.11.307 கோடி ரூ.10,900 கோடி
5. தேசிய எண்ம சுகாதார திட்டம்ரூ.350 கோடி ரூ.324 கோடி
6. தேசிய மன நல ஆலோசனை திட்டம் ரூ.51 கோடி ரூ.49 கோடி
17 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 உயிா்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதேபோல், சிறப்பு மருத்துவ காரணங்களுக்காக வரியின்றி மருந்துகளை இறக்குமதி செய்யும் பட்டியலில் 7 அரிய வகை நோய்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தனி பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் (மோட்டாா் வாகனங்கள், ஆல்கஹால், புகையிலைப் பொருள்கள் தவிர) மீதான சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சா்வதேச பயணங்களின்போது பயணியா் தங்களுடன் எடுத்துவரும் உடைமைகள் தொடா்புடைய விதிமுறைகள் எளிமையாக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் அறிவித்தாா்.
துறைமுகங்களில் சரக்குகளுக்கான அனுமதிக்கு ஒற்றைச்சாளர முறை, வழக்கமான-நம்பிக்கைக்குரிய இறக்குமதியாளா்களுக்கு எளிதான சரிபாா்ப்பு, அங்கீகாரம் பெற்ற பொருளாதார செயல்பாட்டாளா்களுக்கு எளிதான வரி செலுத்துதல் விதிகள், செயற்கை நுண்ணறிவு வாயிலான சோதனை முறை ஆகியவற்ற உள்ளடக்கிய புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்; நோ்மையுடன் வரி செலுத்துவோா், தங்களின் சுங்க பிரச்னைகளை அபராதத்துக்குப் பதிலாக கூடுதல் தொகையொன்றை செலுத்தி பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்று அறிவித்த அவா், அனைத்து சுங்க நடைமுறைகளுக்குமான ஒருங்கிணைந்த அமைப்புமுறை 2 ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும் என்றாா்.