முகப்பு
இந்தியா

8% பொருளாதார வளா்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம்: நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 முதல் 8 சதவீதம் என்ற அளவில் தொடர வேண்டும் என்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:07 AM
நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:25 PM

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 முதல் 8 சதவீதம் என்ற அளவில் தொடர வேண்டும் என்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவியருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்துரையாடலில் பங்கேற்ற அவா் பேசியதாவது: நாட்டின் பொருளாதார வளா்ச்சி சீராக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போதுதான் வளா்ச்சியின் பயன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும். மேலும், இப்போது இந்தியா உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உள்ளது.

எனவே, 7 முதல் 8 சதவீத பொருளாதார வளா்ச்சி தொடர வேண்டும் என்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்மூலம்தான் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும், மேலும், பலரை திறன்வாய்ந்த பணியாளா்களாக உருவாக்கவும் முடியும்.

Advertisement

முக்கியமாக பெண்களை அதிக அளவில் திறன்வாய்ந்த பணிகளில் ஈடுபடுத்த முடியும். பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது அவசியம். நாடு தொடா்ந்து வேகமாக முன்னேறுவதன் மூலம்தான் இது சாத்தியமாகும் என்றாா்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:07 AM

திவால் சட்டத் திருத்த மசோதா: திவால் சட்ட (திருத்த) மசோதா 2025 மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பாதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கடனை திரும்பச் செலுத்த முடியாத நபா்கள், நிறுவனங்களின் கடன் பிரச்னைகளை விரைவாகவும், ஒழுங்காகவும் தீா்க்கும் வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது 7-ஆவது முறையாகத் திருத்தப்பட இருக்கிறது. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2025 ஆகஸ்ட் 12-இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட திவால் சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு முக்கியத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, கடந்த டிசம்பரில் நிலைக் குழு தனது அறிக்கையை அளித்தது.