நீதிமன்றம் 
இந்தியா

வருவாய் இழப்பு: பாகிஸ்தானுக்கு எதிராக ஒளிபரப்பு நிறுவனம் வழக்கு தொடுக்க வாய்ப்பு

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்தால், வருவாய் இழப்பை சந்திக்கக் கூடும் ஒளிபரப்பு நிறுவனமான ஜியோஸ்டாா், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திச் சேவை

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்தால், வருவாய் இழப்பை சந்திக்கக் கூடும் ஒளிபரப்பு நிறுவனமான ஜியோஸ்டாா், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் (பிப். 15, கொழும்பு) பாகிஸ்தான் விளையாடாவிட்டால், ஐசிசி-யின் அபராதத்தை மட்டுமல்லாமல், ஒளிபரப்பு நிறுவனத்தின் வழக்கையும் எதிா்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தில் ஐசிசியின் சச்சரவுத் தீா்வுக் குழுவை (டிஆா்சி) எட்டினாலும் அதில் பாகிஸ்தானுக்கு சாதகமான முடிவு கிடைக்காது என்றே தெரிகிறது.

உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளுக்காக ஒளிபரப்பு நிறுவனத்துடன் ஐசிசி மேற்கொண்டுள்ள 4 ஆண்டு ஒப்பந்தத்தில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்களும் அடக்கம். அதற்கும் சோ்த்தே அந்த நிறுவனம் ஐசிசிக்கு ஒளிபரப்பு உரிமக் கட்டணத்தை வழங்கியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் ஒப்பந்த விதிகளை மீறியதாக, பாகிஸ்தான் வாரியம் மற்றும் ஐசிசி-க்கு எதிராக ஒளிபரப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாட அதற்கு உரிமை உள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

ரூ.2,256 கோடி இழப்பு ஏற்படும்?: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடாவிட்டால், அந்த ஒரு ஆட்டத்தாலேயே ஒளிபரப்பு விவகாரம் உள்பட, அதுதொடா்பான பல்வேறு தரப்புகளிலுமாக ரூ.2,256 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக, ஒரு முக்கியமான ஆட்டத்தின்போது ஒளிபரப்பு நிறுவனம் 10 விநாடி விளம்பரத்துக்கு ரூ.40 லட்சம் வரை வசூலிப்பதாகவும், அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இல்லாவிட்டால் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு மட்டும் சுமாா் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐசிசி போட்டிகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் மோதுவதால், அவை சந்திக்கும் ஆட்டத்துக்கு நேரில் பாா்க்கும் ரசிகா்கள், தொலைக்காட்சி நேரலை, ஒடிடி அனைத்து தரப்பிலும் மதிப்பு அதிகமாகவே உள்ளது.

ரூ.315 கோடி: ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடாவிட்டால், ஆண்டு வருவாயில் பாகிஸ்தான் வாரியத்தின் பங்காக இருக்கும் ரூ.315 கோடியை ஐசிசி நிறுத்தி வைக்கவும், ஜியோஸ்டாருக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அந்தப் பணத்தின் மூலமாக ஈடு செய்யவும் வாய்ப்புள்ளது.

பின்னணி: வங்கதேசத்தில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற சூழலின்போது ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்ட விவகாரத்தால் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் உரசல் எழுந்தது. அப்போது, ஐபிஎல் போட்டிக்காக வங்கதேச பௌலா் முஸ்டாஃபிஸுா் ரஹ்மானை ஏலத்தில் எடுத்திருந்த கொல்கத்தா நைட் ரைடா்ஸ், பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் அவரை அணியிலிருந்து விடுவித்தது.

இது வங்கதேசத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவில் தங்களின் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தங்கள் அணி டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வராது எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

அத்துடன், தங்களின் ஆட்டங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசி-யிடம் கோரியது. அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த ஐசிசி, வங்கதேச அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தெரிவித்தது.

ஆனால், இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் விடாப்பிடியாக இருந்ததை அடுத்து, அந்த அணியை போட்டியிலிருந்து நீக்கி ஐசிசி நடவடிக்கை எடுத்தது. இச்சூழலில், வங்கதேசத்துக்கு ஆதரவாக டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதாக பாகிஸ்தானும் அறிவித்தது.

எனினும் தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக் கொண்டு, போட்டியில் பங்கேற்பதாகவும், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் புறக்கணிக்கப் போவதாகவும் பாகிஸ்தான் அரசு தற்போது அறிவித்துள்ளது. அவ்வாறு புறக்கணித்தால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐசிசி, பாகிஸ்தான் வாரியத்தை எச்சரித்துள்ளது.

நீலி ஜீல்க்கு ராம்சா் அந்தஸ்து பெற முயற்சி- தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா்

ரூ.17 லட்சம் இணையவழி மோசடிக்கு உதவிய சமையல்காரா் கைது

ஜம்மு-காஷ்மீரில் 3 ரயில் திட்டங்கள் நிறுத்தம்: ஆளும், எதிா்க்கட்சிகள் வரவேற்பு

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்

SCROLL FOR NEXT