இந்தியா

டெலீட் செய்யப்பட்ட யூடியூப் சேனல்! 3 சகோதரிகளின் தற்கொலை பின்னணி!!

3 சகோதரிகளின் தற்கொலை பின்னணியில் யூடியூப் சேனல் டெலீட் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

காஸியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், கொரியன் கேமுக்கு அடிமையாகியிருந்த மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

பத்து நாள்களுக்கு முன்பு 3 சகோதரிகளுக்கும் அவர்களது தந்தைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு, இவர்கள் நடத்தி வந்த யூடியூப் சேனல் டெலீட் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே, இவர்களது தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொரியன் நாடகங்களை மையமாகக் கொண்டும், கார்டூன்களைப் பற்றியும் இந்த சகோதரிகள் யூடியூப் சேனல் தொடங்கி விடியோக்களைப் பதிவேற்றி வந்துள்ளனர். இது பற்றி தந்தை அறிந்து, கடுமையாக திட்டியிருக்கலாம், கொரிய கலாசாரத்துடன் ஐக்கியமாகும் தங்களது மகள்களைப் பற்றி கவலைப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பலியான நிஷிகா (16), பிரச்சி (14), பாக்கி (12) என்ற 3 சகோதரிகள், கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் கொரிய நாடகங்களுக்கு அடிமையாகி, கேமிங் விளையாட்டுகளில் முழுமையாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை, தங்கள் வீடு இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

வீட்டின் பால்கனி வழியாக ஒருவருக்குப் பின் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தற்கொலைதான் என்பதை உடல்கூராய்வும் உறுதி செய்திருக்கிறது.

முதற்கட்ட விசாரணையின்போது, மூவரும் கொரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்ததாக அவர்களது தந்தை சேத்தன் குமார் கூறியுள்ளார்.

எல்சா, சின்ரெல்லா கதாபாத்திரங்களைப் போல இவர்கள் அவ்வப்போது மேக்கப் போட்டுக் கொண்டு புகைப்படங்கள், ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றியிருக்கிறார்கள்.

மற்ற யூடியூபர்களைப் போல தங்கள் பெண்களும் ரீல்ஸ்களைப் போட்டு பிரபலமடைவார்கள் என்று எண்ணி, இரண்டு செல்போன்களை தந்தைதான் பெண்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்கள் கொரிய நாடகங்களுக்கு அடிமையாகி, தங்களை கொரியா அழைத்துச் செல்லவும் கொரிய கலாசாரத்துக்கு அடிமையானதையும் பார்த்த தந்தை, வாங்கிய செல்போன்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்துவிட்டிருக்கிறார்.

கொரிய நாடகங்களைப் பார்த்து, அவர்கள் ஒரு தனி உலகத்துக்குள் வாழ ஆரம்பித்தனர். அதனை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களை மாற்றவும் முடியவில்லை என்று தந்தை விசாரணையின்போது கூறியிருக்கிறார்.

இவர்கள் தனிமையில் அறைக்குள்ளேயே இருந்திருக்கிறார்கள். அவர்களது அறையின் சுவரில் என் வாழ்க்கை மிக மிக தனிமையானது என எழுதப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் இரவு, சிறுமிகளுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் வந்துள்ளது. அவர்கள் கொரியா செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். பிறகு மூவரும் அவர்கள் அறைக்குள் சென்றிருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து மூவரும் ஒரு அறைக்குள் சென்று கதவை தாழ்பாள் போட்டுவிட்டு, அங்கிருந்த ஜன்னலை திறந்து குதித்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தந்தை விற்பனை செய்த 2 செல்போன்களில் ஒன்று கைப்பற்றப்பட்டு, தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் பேருந்து விபத்து: 13 ஆக உயர்ந்த பலி!

இந்த வார ஓடிடி படங்கள்!

ஆர்சிபிக்கு 3 ஆண்டுகளில் 3 கோப்பைகள்..! ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!

“ஆர்சிபி கொடி உயரப் பறக்கிறது..” வீராங்கனைகளுக்கு விராட் கோலி வாழ்த்து!

மலையாள நடிகர் கார் மீது மோதிய இருசக்கர வாகனம்! இருவர் படுகாயம்!

SCROLL FOR NEXT