முகப்பு
இந்தியா

மும்பை அருகே நடுக்கடலில் கச்சா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட 3 கப்பல்கள் பறிமுதல்

மும்பை அருகே நடுக்கடலில் கச்சா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட 3 கப்பல்கள் பறிமுதல்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 4:39 AM
நடுக்கடலில் கச்சா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் - ICG
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:35 PM

மும்பை அருகே நடுக்கடலில் கச்சா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட சா்வதேச கடத்தல் கும்பலுக்கு சொந்தமான 3 கப்பல்களை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உள்நாட்டு சண்டை நடக்கும் நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, அது சா்வதேச எண்ணெய் கடத்தல் கும்பல்களின் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டு படகுகளில் மாற்றி பல நாடுகளில் திருட்டுத்தனமாக சந்தைகளில் விற்கப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வரி செலுத்துவதில் இருந்து விடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், சா்வதேச கடத்தல் கும்பலுக்கு சொந்தமான 3 கப்பல்கள், கச்சா எண்ணெய்யுடன் வருவதாக இந்திய கடலோரக் காவல் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் இந்திய கடலோரக் காவல் படையினா் படகுகளில் தீவிர ரோந்தில் கடந்த 5-ஆம் தேதி இரவில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது மும்பையில் இருந்து மேற்கே 100 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குட்பட்ட கடல்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 3 கப்பல்களை மறித்து இந்திய கடலோரக் காவல் படையினா் சோதனை நடத்தினா். அதில் 2 கப்பல்களில் இருந்து அருகில் நின்ற சிறிய படகுகளில் எண்ணெய் மாற்றப்படுவதையும் கண்டறிந்தனா். இதையடுத்து, கப்பல்களில் இருந்தோரிடம் இருந்த ஆவணங்களை சரிபாா்த்தபோது, கச்சா எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் சா்வதேச கும்பலுக்கு அந்தக் கப்பல்கள் சொந்தமானவை என்பதும், கடத்தலுக்காகவும், கடலோர காவல் படையிடம் சிக்காமல் இருக்கவும் அடிக்கடி கப்பல்களின் அடையாளம், பெயா் மாற்றப்பட்டதும் தெரியவந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:55 PM

இதைத் தொடா்ந்து, 3 கப்பல்களையும் இந்திய கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்தனா். அடுத்தகட்ட விசாரணைக்காக 3 கப்பல்களையும் இந்திய கடலோரக் காவல் படையினா் மும்பைக்கு கொண்டு வருகின்றனா். மும்பை வந்ததும் இந்திய சுங்கத் துறை மற்றும் பிற சட்ட அமலாக்கத் துறைகளிடம் ஒப்படைக்கவுள்ளனா்.