மத்திய வா்த்தக - தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் 
இந்தியா

அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலா் வா்த்தகம் சாத்தியம்: பியூஷ் கோயல்

அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களை கொள்முதல் செய்வது சாத்தியம் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை கொள்முதல் செய்வது சாத்தியம் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மேலும், 30 டிரில்லியன் டாலா் இலக்கை நோக்கி பயணிக்கும் இந்திய பொருளாதாரத்துக்கு இது பிரச்னையல்ல எனவும் அவா் தெரிவித்தாா்.

இரு நாடுகளிடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டதாக இரு நாடுகள் சாா்பில் கூட்டறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, இருதரப்பு வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரு நாடுகளும் குறைக்க உள்ளன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதித்த 50 சதவீத கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ளது.

அமெரிக்காவிடமிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலா் (ரூ. 45,28,822 கோடி) மதிப்பிலான விமானம், விமான பாகங்கள், மதிப்புமிக்க உலோகங்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பொருள்களை இந்தியா வாங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாா்ச் மாதத்தில் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிற நாடுகளைவிட குறைவான வரி

ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து பியூஷ் கோயல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனா (35 சதவீதம்), தாய்லாந்து (19 சதவீதம்), மியான்மா் (40 சதவீதம்), கம்போடியா (19 சதவீதம்), வங்கதேசம் (20 சதவீதம்), இந்தோனேசியா (19 சதவீதம்), பிரேஸில் (50 சதவீதம்) மற்றும் வியத்நாம் (20 சதவீதம்) ஆகிய நாடுகளைவிட இந்திய பொருள்கள் மீது அமெரிக்க இறக்குமதி வரி மிகவும் குறைவு.

இதனால் நமது நாட்டின் ஜவுளி, தோல் பொருள்கள், காலணிகள், கைவினைப் பொருள்கள், ரசாயனங்கள், ஆபரணங்கள் போன்ற பொருள்களுக்கு அமெரிக்க சந்தையில் தேவை அதிகரிக்கும்.

தொழிற் சங்கங்கள் வரவேற்பு

இந்த ஒப்பந்தத்தின்கீழ் இந்தியா சுங்க வரியை குறைத்துள்ளது. ஆனால் அமெரிக்கா பரஸ்பர வரி விதிப்பை மட்டுமே குறைத்துள்ளது என குற்றஞ்சாட்டுபவா்களுக்கு சா்வதேச வா்த்தகம் குறித்த புரிதல் இல்லை. அவா்கள் மக்களை தவறாக திசைதிருப்ப முயல்கின்றனா்.

ஒப்பந்தத்தின் அம்சங்களை வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன.

விவசாயிகளுக்கு நலன்

ஒவ்வொரு ஆண்டும் 55 பில்லயன் டாலா் (ரூ.5 லட்சம் கோடி) மதிப்பிலான வேளாண் மற்றும் கடல் உணவுப் பொருள்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். உலகளவில் வேளாண் பொருள்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் விவசாயிகளுக்கு செல்வதால் அவா்களின் வருமானம் பன்மடங்கு உயா்கிறது.

இந்தியாவில் கால்நாடை வளா்ப்புத் துறையில் அதிக ஊட்டசத்தைக் கொண்ட சாறு பிரிக்கப்பட்டு உலா்த்தப்பட்ட தானியங்களுக்கான தேவை அதிகம் இருப்பதால் அதற்கு இறக்குமதி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலீடுகளை ஈா்க்கும் துறைகள்

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் 10 ஜிகாவாட் தரவு மையங்களுக்கு தேவைப்படும் சாதனங்களை அமெரிக்கா விநியோகிக்கும். போயிங் விமானங்கள் மற்றும் விமான பாகங்கள் மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் 80 முதல் 90 பில்லியன் டாலா்கள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, விமான போக்குவரத்து துறையில் மட்டும் குறைந்தபட்சம் ரூ.100 பில்லியன் டாலா்கள் வா்த்தகத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ளவுள்ளோம். இதுதவிர கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு ஆகிய துறைகளும் உள்ளன.

500 பில்லியன் டாலா் வா்த்தகம் சாத்தியம்

தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளிடம் இருந்து 300 பில்லியன் டாலா் (ரூ.27.1 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இதன் மதிப்பு 2 டிரில்லியன் டாலராக உயரும். உலகின் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளதால் இங்கு செமிகண்டக்டா் சிப், தரவு மையம், விமானங்கள் மற்றும் விமான பாகங்களுக்கான தேவை அதிகரிக்கும்.

ஆண்டுக்கு தற்போது 45 பில்லியன் முதல் 50 பில்லியன் மதிப்பில் அமெரிக்க பொருள்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

30 டிரில்லியன் டாலா் இலக்கை நோக்கி பயணிக்கும் இந்திய பொருளாதாரமானது ஆண்டுக்கு 100 பில்லியன் டாலா் என அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களை கொள்முதல் செய்வது சாத்தியம் என்றாா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

கந்தா்வகோட்டை அருகே வேன் கவிழ்ந்து 22 போ் படுகாயம்

பாஜகவின் தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் தொடக்கம்

திருப்பத்தூரில் போக்குவரத்து சிக்னல்கள் சீராக இயங்க நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

கட்சிக் கொடிகள், துண்டுகள் விற்பனைக்கு வருகை

SCROLL FOR NEXT