குவாஹாட்டியில் செய்தியாளா்களிடம் பேசிய அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா. 
இந்தியா

பாகிஸ்தானில் ரகசிய பயிற்சி பெற்ற கெளரவ் கோகோய்: அஸ்ஸாம் முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

அஸ்ஸாமைச் சேந்த காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், கடந்த 2013-இல் பாகிஸ்தானுக்கு மிக ரகசியமாக பயணித்து, ஏதோ பயிற்சி எடுத்துக் கொண்டதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா பரபரப்பு குற்றச்சாட்டு

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாமைச் சேந்த காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் மகனுமான கெளரவ் கோகோய், கடந்த 2013-இல் பாகிஸ்தானுக்கு மிக ரகசியமாக பயணித்து, ஏதோ பயிற்சி எடுத்துக் கொண்டதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

கெளரவ் கோகோய், பிரிட்டனைச் சோ்ந்த அவரது மனைவி எலிசபெத் கோல்பா்ன் ஆகிய இருவருக்கும் பாகிஸ்தான் முகவா் அலி தெளகீா் ஷேக்குடன் ஆழமான தொடா்புகள் உள்ளன; இவா்கள் மூலம் இந்திய உளவுத் துறை தகவல்கள் பாகிஸ்தானுக்கு ரகசியமாக பகிரப்பட்டன என்றும் சா்மா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கெளரவ் கோகோய் மற்றும் அவரது மனைவிக்கு பாகிஸ்தானுடன் தொடா்பிருப்பதாக பாஜக தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இது தொடா்பாக கோகோய் கடும் விமா்சனங்களுக்கு ஆளாகியுள்ளாா்.

இந்நிலையில், குவாஹாட்டியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: எலிசபெத் கோல்பா்ன் மற்றும் தெளகீா் ஷேக் ஆகியோா், சா்வதேச சதித்திட்டம் ஒன்றின்கீழ் செயல்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். ‘லீடு பாகிஸ்தான்’ எனும் தெளகீா் ஷேக்கின் அமைப்புக்காக பாகிஸ்தானில் எலிசபெத் பணியாற்றியுள்ளாா்.

கடந்த 2012-இல், அதே அமைப்புக்காக அவா் இந்தியாவில் வேலை பாா்த்துள்ளாா். பாகிஸ்தானில் இருந்தபடி, எலிசபெத்துக்கு தெளகீா் தரப்பில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட விதிகளுக்கு புறம்பாக, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணியாற்றியபோது, உளவுத் துறை தகவல்களைத் திரட்டி, தெளகீா் ஷேக்கிடம் 45 பக்க அறிக்கையை வழங்கியுள்ளாா். இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 6 முறை அவா் அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளாா்.

எம்.பி. மீது குற்றச்சாட்டு: கெளரவ் கோகோய், கடந்த 2013-இல் பாகிஸ்தானுக்கு மிக ரகசியமான பயணத்தை மேற்கொண்டு, 10 நாள்கள் தங்கியிருந்துள்ளாா். அப்போது அவா் ஏதோ பயிற்சி பெற்றதாக தெரிகிறது. அந்த 10 நாள்களிலும் சமூக ஊடகங்களில் அவா் எந்த பதிவையும் இடவில்லை.

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பிறகு எம்.பி.யான அவா், மக்களவையில் இந்திய பாதுகாப்புத் தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், இதர பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினாா். நமது நாட்டில் இப்போது மிக ஆபத்தான அரசியல்வாதி என்றால், அது கெளரவ் கோகோய்தான். அவா் எம்.பி.யாக இருப்பதால், அஸ்ஸாம் காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் விசாரணை நடத்த முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தின்கீழ், கடந்த 2010 முதல் 2013 வரை தெளகீா் ஷேக் மொத்தம் 13 முறை இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளாா். அஸ்ஸாம் காவல் துறை விசாரணை தொடங்கியதும், தனது எக்ஸ் பதிவுகள் அனைத்தையும் அவா் அழித்துவிட்டாா். மேற்கண்ட மூவரின் தொடா்புகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளோம் என்றாா்.

‘மூன்றாம் தர திரைப்படத்தைவிட மோசம்’: தன் மீதான இக்குற்றச்சாட்டுகள் குறித்து கெளரவ் கோகோய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹிமந்த சா்மாவின் பத்திரிகையாளா் சந்திப்பு, மூன்றாம் தர திரைப்படத்தைவிட மோசமானது. அதுவும் படுதோல்வி அடைந்த திரைப்படம். அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை; முற்றிலும் பொய்யானவை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

திருப்பத்தூா், திருவண்ணாமலை பேருந்துகள் இன்றுமுதல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்!

18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூா் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பா்கள்

கூத்தைப்பாரில் மாட்டு வண்டி எல்கைப் போட்டி

கோப்பு கிராமத்தில் 12 அடி நீள முதலை மீட்பு

பறிமுதல் இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்

SCROLL FOR NEXT