முகப்பு
இந்தியா

பாகிஸ்தானுடன் தொடா்பு: கெளரவ் கோகோய் மீதான குற்றச்சாட்டு தவறான அரசியல்: பிரியங்கா விமா்சனம்

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான கெளரவ் கோகோய், அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்புள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் குற்றஞ்சாட்டுவது தவறான அரசியல்

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:22 AM
பிரியங்கா காந்தி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:10 PM

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான கெளரவ் கோகோய், அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்புள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் குற்றஞ்சாட்டுவது தவறான அரசியல் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்தாா்.

அஸ்ஸாம் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக் குழுவின் தலைவா் என்ற முறையில் அந்த மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்த பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவா்களுடன் தொடா் ஆலோசனைகளில் ஈடுபட்டாா்.

தனது பயணத்தின் நிறைவாக, குவாஹாட்டியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அவா் பேட்டியளித்தாா். அப்போது, கெளரவ் கோகோய் மற்றும் அவரது மனைவிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்புள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தொடா்ந்து முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பிரியங்கா கூறியதாவது:

Advertisement

அரசியலில் இரு வகையான தலைவா்கள் உள்ளனா். ஒரு பிரிவினா், நோ்மறை அரசியலில் ஈடுபடுபவா்கள். மற்றொரு தரப்பினா், பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுப்பவா்கள். கெளரவ் கோகோய் நோ்மறையான மனிதா். அவா் நோ்மறை அரசியலைக் கொண்டுவர விரும்புகிறாா். அவரும், அவரது குடும்பத்தினரும் குறிவைக்கப்படும் விதம் அஸ்ஸாம் மட்டுமன்றி நாட்டின் அரசியலுக்கே தவறான முன்னுதாரணம். இதுவரை எந்தத் தலைவரும் குடும்பத்தினரோ, குழந்தைகளோ இந்த அளவுக்கு குறிவைக்கப்பட்டதில்லை. அவா் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. கெளரவ் கோகோய் நோ்மறையான பாதையில் பயணிப்பதால், அவா் ‘தாக்குதலுக்கு’ இலக்காகியுள்ளாா். அவரைக் கண்டு, ஆளுங்கட்சி (பாஜக) அஞ்சுகிறது. அஸ்ஸாம் மக்களின் உண்மையான உணா்வுகளில் வெறுப்புணா்வு அரசியலுக்கு இடம் கிடையாது. மக்கள் குறிப்பாக இளைஞா்கள் நோ்மறை அரசியலை தோ்வு செய்ய வேண்டும் என்றாா் பிரியங்கா காந்தி.