தகவல் தொழில்நுட்பத்தின் நகரமாக விளங்கும் பெங்களூரு, சர்வம் ஏஐ மூலம் புதிய புரட்சியைப் படைத்திருக்கிறது. சர்வம் ஏஐ என்ற புத்தாக்க நிறுவனம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச அளவில் தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சும் செய்யறிவிலும் இந்தியா வளர்ந்து வருகிறது என்பதற்கான சமிக்ஞையாக இது விளங்குகிறது.
சர்வம் விஷன், புல்புல் வி3 போன்றவை, ஏற்கனவே செய்யறிவில் இயங்கும் கூகுள் ஜெமினி மற்றும் ஓபன் ஏஐ-ன் சாட்ஜிபிடியை விட சிறப்பாக இயங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் நிறுவனர்கள் விவேக் ராகவன், பிரத்யூஷ் குமாருக்கு, இந்தியாவுக்கென பிரத்யேகமாக இயங்கும் முழுமையான ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.
அண்மையில் சர்வம் ஏஐ நிறுவனம் தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசுகளுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. சென்னை ஐஐடி உடன் இணைந்து டிஜிட்டல் சங்கமம் என்ற பெயரில் ஆராய்ச்சி பூங்கா, ஒடிசாவில் மாபெரும் ஏஐ கணினி மையம் அமைக்கப்படவிருக்கிறது.
விடியோ
சர்வம் 1
2பி பாராமீட்டர்கள் எனப்படும் 2 பில்லியன் அளவுருக்களைக் கொண்ட ஒரு மொழியின் மாதிரி. நம் நாட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 10 மொழிகளில் மிகச் சிறப்பாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவாகும்.
சர்வம் விஷன்
ஓசிஆர் எனப்படும் ஆவணங்களை படித்துப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பமே சர்வம் விஷன். கையால் எழுதப்பட்ட ஆவணங்கள், அட்டவணைகளைக் கூட ஸ்கேன் செய்தால் துல்லியமாகப் படித்து டிஜிட்டல் வடிவில் மாற்றிக் கொடுத்துவிடும்.
ஆவணங்களை துல்லியமாகப் படிக்கும் சோதனையில் கூகுளின் ஜெமினி 3 ப்ரோ 80.2 சதவீகிதமும் ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி 69.8 சதவிகித புள்ளிகளைப் பெற்றிருக்கும் நிலையில் சர்வம் விஷன் 84.3 சதவிகித புள்ளிகளுடன் சாதனை படைத்துள்ளது.
புல்புல் வி3
ஏற்கனவே, டைப் செய்யப்பட்டிருக்கும் டிஜிட்டல் கன்டென்டை ஒலியாக மாற்றிக் கொடுக்கும். எழுத்துகளை பேச்சாக மாற்றும் தொழில்நுட்பமே புல்புல் வி3. 22 இந்திய மொழிகளில் சுமார் 35 குரல்களில் ஒலி வடிவத்தில் பெறலாம். மற்ற ஒலி அமைப்புகளைப் போல இயந்திரக் குரல் அல்லாமல் மனிதக் குரலில் இருக்கிறதாம்.
ராகவன் ஐஐடி தில்லியில் பட்டப்படிப்புடன் வெளிநாட்டில் பிஎச்டி முடித்துவிட்டு, 20 ஆண்டுகளாக பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர். இவர் இந்தியா வந்து ஆதார் அமைப்பிலும், உச்ச நீதிமன்றத்தில் செயற்கை நுண்ணறிவால் மொழிபெயர்ப்பு செய்யும் டூல்களையும் உருவாக்கிக் கொடுத்தார்.
டாக்டர் பிரத்யூஷ் குமார் பொறியியல் பட்டம் பெற்று, ஐஐடி மும்பையில் கணினி பொறியியலில் பிஎச்டி முடித்தவர். ஐஐடி சென்னையில் பணியாற்றிக் கொண்டே பல மென்பொருள் நிறுவனங்களிலும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே இருக்கும் செய்யறிவுகள், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் செய்யறிவு தொழில்நுட்பம், இந்திய பழக்க வழக்கங்கள், கலாசாரம், வானிலை என அனைத்தையும் அறிந்து அதற்கேற்ப செயல்படும் என்பதால், இந்தியா, செய்யறிவு துறையில் முன்னிலைப் பெறும் போட்டிக்கான துவக்கமாக இது மாறியிருக்கிறது.
இந்தியர்கள் எப்போதும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோராக மட்டும் அல்லாமல், தொழில்நுட்ப உற்பத்தியாளராகவும், புரட்சியாளராகவும் மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.