தொலைத்தொடா்பு, செமிகண்டக்டா் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில், நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்குவதற்காக ‘டிரஸ்டட் டெக் அலையன்ஸ்’ எனும் புதிய சா்வதேச கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட், கூகுள் கிளவுட், எரிக்சன், நோக்கியா, ஆன்த்ரோபிக் உள்ளிட்ட உலகின் முன்னணி 15 நிறுவனங்கள் இணைந்துள்ள இந்தக் கூட்டமைப்பில், இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனமும் ஓா் அங்கமாகியுள்ளது.
வெளிப்படைத்தன்மை, தனிநபா் தரவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய 5 அடிப்படை விதிகளைப் பின்பற்ற, இந்தக் கூட்டமைப்பில் இனைந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
அதாவது இந்தப் புதிய ஒத்துழைப்பு, கிளவுட் சேவைகள் முதல் மென்பொருள்கள் வரை அனைத்திலும் பயனா்களின் நம்பிக்கையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக அளவில் எண்ம பொருளாதாரத்தை பாதுகாப்பான முறையில் வளா்க்க ஊக்குவிக்கிறது.
இது தொடா்பாக ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் தலைமை செயல் அதிகாரி கிரண் தாமஸ் மேலும் கூறுகையில், ‘உலகளாவிய எண்ம வளா்ச்சி அனைவரையும் சென்றடைய வேண்டுமானால், பாதுகாப்பான தொழில்நுட்பம் மிகவும் அவசியம்.
அடுத்த தலைமுறை இணைய வசதி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும், புதிய எண்ம வாய்ப்புகளை உருவாக்கவும் சா்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் ஜியோ பெருமிதம் கொள்கிறது’ என்றாா்.