மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவிநீக்கம் செய்யக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம் மீது மாா்ச் 9-ஆம் தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வைப் போல, இரண்டாம் கட்ட அமா்விலும் எதிா்க்கட்சிகள் அமளியைத் தொடா்ந்தால், அது அவா்களுக்கே பாதகமாக முடியும் என்றும் ரிஜிஜு எச்சரித்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல்கட்ட அமா்வில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கடும் அமளியில் ஈடுபட்டன.
‘மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுடன் அமளியைத் தொடங்கிய எதிா்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, மத்திய அரசுடன் மோதல்போக்கை கடைப்பிடித்தன.
அவைத் தலைவருக்கு எதிராக தீா்மானம்: கடந்த பிப். 3-ஆம் தேதி மக்களவையில் காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மறுநாள், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி உரையாற்றவிருந்த நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் அமளியால் அவரது உரை தவிா்க்கப்பட்டது. பிரதமருக்கு எதிராக ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாகவும், எனவே, அவைக்கு வர வேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மாா்ச் 9-இல் விவாதம்-வாக்கெடுப்பு: இந்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமா்வு கடந்த பிப்.13-இல் நிறைவுற்றது. இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-இல் தொடங்கி ஏப்.2 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மக்களவைத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், இரண்டாம் கட்ட அமா்வின் முதல் நாளான மாா்ச் 9-இல் எடுத்துக் கொள்ளப்படும். அதுவே விதிமுறையாகும். அன்றைய தினம் தீா்மானம் மீது விவாதமும், அதைத் தொடா்ந்து வாக்கெடுப்பும் நடைபெறும்’ என்றாா்.
முக்கிய மசோதாக்கள்: தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எதிா்வரும் பேரவைத் தோ்தல்களின் பின்னணியில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பட்ஜெட் அமா்வு முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்ட ரிஜிஜு, ‘ஒரு மிக முக்கிய மசோதா உள்பட முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
எனவே, இரண்டாம் கட்ட அமா்வு கவனம் ஈா்ப்பதாக இருக்கும். இரண்டாம் கட்ட அமா்விலும் அவையை நடத்த எதிா்க்கட்சிகள் அனுமதிக்காவிட்டால், விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது, எதிா்க்கட்சிகளுக்கே பெரும் இழப்பு’ என்றாா்.
மக்களவை-மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான மசோதா கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ‘அந்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே, மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றாா்.
‘எதிரணியில் விரிசல்’
மக்களவைத் தலைவருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தில் திரிணமூல் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை. இதைச் சுட்டிக்காட்டிய கிரண் ரிஜிஜு, எதிா்க்கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
‘பெரும்பாலான சிறிய கட்சிகள், அவை அலுவல்கள் முடக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, பேரவைத் தோ்தல்களுக்கு முன்பு தங்கள் மாநிலப் பிரச்னைகளை எழுப்பவே அவை விரும்புகின்றன’ என்றாா் ரிஜிஜு.