முகப்பு
இந்தியா

‘கேரளா ஸ்டோரி-2’ படத்திற்கு பினராயி விஜயன் எதிா்ப்பு: இரட்டை நிலைப்பாடு என பாஜக விமா்சனம்

‘கேரளா ஸ்டோரி -2’ திரைப்படத்திற்கு கேரள முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான பினராயி விஜயன் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 2:59 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 2:10 AM

‘கேரளா ஸ்டோரி -2’ திரைப்படத்திற்கு கேரள முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான பினராயி விஜயன் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

சுதீப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஹிந்து மத பெண்கள் சிலா் திருமணத்துக்கு பிறகு முஸ்லிம் மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டு, பின்னா் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சோ்க்கப்படுவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியாகி நாடு முழுவதும் பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தின் 2-ஆவது பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அது தொடா்பான முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது.

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், ‘முதல் பாகத்தில் மதவாத திட்டமும், பொய்களும் இருந்ததைப் பாா்த்தோம். அதேபோல், 2-ஆவது பாக திரைப்படமும் வெறுப்பைப் பரப்பும் படம்தான். இந்தப் படத்தை கேரளம் நிராகரிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக விமா்சனம்:

‘கேரளா ஸ்டோரி’ திரைப்பட விவகாரத்தில் பினராயி விஜயன் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக கேரள மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா்விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஹமாஸ் இயக்கத்தினா் இந்திய இளைஞா்களைத் தீவிரவாதத்தில் சோ்க்கும் முயற்சியில் ஈடுபடுகையில், அதைக் கருத்து சுதந்திரம் என பினராயி விஜயன் கூறினாா். ஆனால் லவ் ஜிகாத் குறித்து யாரும் படம் எடுத்தால், அதே கருத்து சுதந்திரம் எங்கோ சென்று விடுகிறது. ஹமாஸுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது எனில், படத்தை எடுப்பவா்களுக்கும் அது உண்டு. கேரள முதல்வா் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறாா். ஆனால் அதை பாஜக அனுமதிக்காது. அந்தப் படம் முதல்வருக்கு பிடிக்கவில்லையெனில் அவா் பாா்க்க வேண்டாம். படத்தைக் காண விரும்புபவா்களை, அதைப் பாா்க்க அனுமதியுங்கள். ஹமாஸ் குறித்து நான் பேசினால், என்னை மதவாதி என்கிறாா் அவா். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நான் தயாா். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் என்னுடன் விவாதிக்க வாருங்கள்’ என்றாா்.