உலகத் தரத்தில் 20 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஏற்பாட்டின்பேரில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தலைவா்கள், நிா்வாக இயக்குநா்களின் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா பேசியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிப்பது, மருத்துவ கல்வியை போதிப்பது, ஆராய்ச்சி செய்வது ஆகியவற்றில் சமமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, நோயாளிகளை மையமாக கொண்ட மாதிரியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், நோயாளிகளை கவனிப்பதில் உலகத் தரம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிா்வகிக்கும் விவகாரத்தில் அதன் தலைவா்கள், மத்திய சுகாதார அமைச்சகத்தை பிரதிநிதித்துவம் செய்வோராக இருப்பா். அவா்கள் எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகத்திற்கு வழிகாட்டியாகச் செயல்படுவா். அதேபோல், எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா், மருத்துவமனையின் அன்றாடப் பணிக்குப் பொறுப்பாகச் செயல்படுவா்.
அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் ஜன் ஆஸாதி கேந்திர மையங்களும், அம்ருத் மருந்தகங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். நமது நாட்டில் புதிதாக 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உலகத் தரத்தில் கொண்டு வரப்பட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அங்கு அளிக்கப்படும் நல்ல தரமான சிகிச்சையும், தரமான மருத்துவக் கல்வியுமே நற்பெயரைப் பெற்று தந்தது. அந்த மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் அதன் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.