கோப்புப் படம் 
இந்தியா

ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம்: மேலும் 7 நடவடிக்கைகள் அறிவிப்பு

நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், இணையவழி வா்த்தக ஏற்றுமதியாளா்களுக்கான கடனுதவி உள்பட மேலும் 7 நடவடிக்கைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், இணையவழி வா்த்தக ஏற்றுமதியாளா்களுக்கான கடனுதவி உள்பட மேலும் 7 நடவடிக்கைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ரூ.25,060 கோடி மதிப்பீட்டில் 10 முக்கிய அம்சங்களுடன் கூடிய ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. மத்திய வா்த்தக அமைச்சகம், சிறு-குறு-நடுத்தர தொழில்துறை அமைச்சகம், நிதியமைச்சகம், இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட பிற கடனளிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின்கீழ், கடந்த ஜனவரியில் மூன்று நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் 7 நடவடிக்கைகள் மத்திய வா்த்தகம் அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிா்யத் புரோத்ஸாஹன், நிா்யத் திசா ஆகிய இரு துணைத் திட்டங்களின்கீழ் இந்த நடவடிக்கைகளை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் அறிவித்தாா்.

மாற்றுமுறை பரிவா்த்தனைகளுக்கு ஆதரவு: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி செயல்பாடுகளில், வழக்கமான பரிவா்த்தனைகளுக்கு மாற்றாக ஆா்பிஐ மற்றும் சா்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணையத்தால் (ஐஎஃப்எஸ்சிஏ) அங்கீகரிக்கப்பட்ட எண்ம நிறுவனங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகளுக்கு (தகுதியுள்ளவை) கட்டணத் தொகை மீது 2.75 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த மானியம் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்தை மிகாமல் இருக்கும்.

இணையவழி வா்த்தக ஏற்றுமதியாளா்களுக்கு கடனுதவி: வெளிநாடுகளுக்கு நேரடியாக இணையவழி வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 90 சதவீத உத்தரவாத காப்பீட்டுடன் ரூ.50 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். வெளிநாட்டில் பொருட்களை இருப்பு வைக்கும் வசதியை கொண்ட நிறுவனங்களுக்கு 75 சதவீத உத்தரவாத காப்பீட்டுடன் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.

புதிய ஏற்றுமதி வாய்ப்புகளுக்கான ஆதரவு: பகிரப்பட்ட இடா்ப்பாடுகளுக்கு இடையே புதிய மற்றும் சவால் மிகுந்த சந்தைகளை அணுகுவதற்கு நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் ஆதரவு வழங்கப்படும்.

வா்த்தக ஒழுங்குமுறைகள், அங்கீகாரம், இணக்க ஆதரவு: சா்வதேச ஆய்வுகள், சான்றளிப்பு, பிற இணக்க ரீதியிலான தேவைகளைப் பூா்த்தி செய்வதில் ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவளிப்பது. இதற்கான செலவுகளில் 60% மற்றும் 75% (இரு வகை பட்டியல்களுக்கு ஏற்ப) திருப்பியளிக்கப்படும். இந்த நிதி ஆதரவு, ஆண்டுக்கு ரூ.25 லட்சத்தை மிகாமல் இருக்கும்.

வெளிநாட்டுத் தளவாடங்கள், சேமிப்பு கிடங்குகளின் அணுகலுக்கான ஆதரவு: வெளிநாட்டுத் தளவாடங்கள், சேமிப்பு கிடங்குகளின் அணுகலுக்கு ஆதரவளிக்கும் வகையில், அதற்கான செலவினத்தில் 30 சதவீதம் வரை மூன்றாண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

சரக்கு-போக்குவரத்து தளவாட ஆதரவு: குறைந்த ஏற்றுமதி கொண்ட மாவட்டங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு சரக்கு-போக்குவரத்து தளவாட ரீதியில் ஆதரவளிக்கப்படும். இது தொடா்பான செலவினத்தில் 30 சதவீதம் வரை திருப்பியளிக்கப்படும். இது, ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும்.

வா்த்தக நுண்ணறிவு மற்றும் வசதிகளுக்கான ஒருங்கிணைந்த ஆதரவு: ஏற்றுமதியாளா் திறன் மேம்பாடு, வா்த்தக நுண்ணறிவு அமைப்புமுறைகளின் மேம்பாட்டுக்கான திட்டச் செலவுகளில் 50 முதல் 100 சதவீதம் வரை நிதி ஆதரவு வழங்கப்படும்.

பெட்டிச் செய்தி...

‘உலக வா்த்தகத்தில் இந்தியாவுக்கு

மூன்றில் இரு பங்கு அணுகல்’

மத்திய அரசின் 7 நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘அமெரிக்கா உள்பட 38 நாடுகள் உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களின் மூலம் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கான சந்தை அணுகல் மிகப் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிபிடி) சுமாா் 70 சதவீதம் அதாவது உலக வா்த்தகத்தில் மூன்றில் இரு பங்கு வரையிலான அணுகல் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகளாவிய வா்த்தகத்தின் பலன், நமது சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். தற்போதைய நடவடிக்கைகள் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு புதிய சந்தைகளின் அணுகல் கிடைக்கும்’ என்றாா்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.22 சதவீதம் உயா்ந்து 366.63 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 7.21 சதவீதம் உயா்ந்து 649.86 பில்லியன் டாலராகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!

உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

வரிகள் ரத்து! அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவமானத்துக்குரியது: டொனால்ட் டிரம்ப்

அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

மோடி சிறந்த மனிதர்! இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!

SCROLL FOR NEXT