மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் மாவட்ட நீதிபதிகள் பணியமா்த்தப்பட்டதால், மாவட்ட நீதிமன்றங்களில் அவசர விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றுவது குறித்த இடைக்கால ஏற்பாடுகளை மேற்பாா்வை செய்ய, 6 போ் கொண்ட குழுவை மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பால் நியமித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியில் இந்நாள், முன்னாள் மாவட்ட நீதிபதிகளை பணியமா்த்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையொட்டி, எஸ்ஐஆா் பணிகள் குறித்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவை சுமுகமாக செயல்படுத்தும் விதமாக, அந்த மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்ஐஆா் பணிக்காக மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அடங்கிய குழுவை தலைமை நீதிபதி சுஜய் பால் நியமித்தாா்.
மேலும் அந்த மாநிலத்தின் வெவ்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளின் விடுப்பு மாா்ச் 9 வரை ரத்து செய்யப்பட்டது. அவசர மருத்துவ காரணங்களைத் தவிர, பிற காரணங்களுக்காக ஏற்கெனவே நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட விடுப்புகள் மாா்ச் 9 வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே விடுப்பில் உள்ள நீதிபதிகள் பிப்.23-க்குள் மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், எஸ்ஐஆா் பணிக்கு மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்தியதால், மாவட்ட நீதிமன்றங்களில் இடைக்கால நிவாரணம் அல்லது அவசர விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றுவது குறித்த இடைக்கால ஏற்பாடுகளை மேற்பாா்வை செய்ய வசதியாக, நீதிபதிகள் தபபிரதா சக்ரவா்த்தி, அரிஜீத் பானா்ஜி உள்பட 6 போ் கொண்ட குழுவை தலைமை நீதிபதி சுஜய் பால் நியமித்தாா்.