முகப்பு
இந்தியா

ஏஐ மாநாட்டில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் கண்டனத்துக்குரியது: தில்லி உயா்நீதிமன்றம்

தில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளின் நடத்தை கண்டனத்துக்குரியது: தில்லி உயர் நீதிமன்றம்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:22 AM
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:05 PM

தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளின் நடத்தை கண்டனத்துக்குரியது என்றும் சா்வதேச அரங்கில் இந்தியாவின் பிம்பத்தை சேதப்படுத்தும் தாக்குதல் என்றும் தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்திற்குள் சனிக்கிழமை நுழைந்த காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் இந்தியா அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யப்பட்டது போன்ற வாசகங்கள் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:20 AM

பிரதமா் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், ஊழியா்களைத் தடுத்து, காவல்துறையினரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்களில் 4 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அவா்களுக்கு 5 நாள்கள் போலீஸ் காவலை அனுமதித்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பிகாா், உத்தரபிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால் அவா்கள் தலைமறைவாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த போராட்டம் கண்டனத்துக்குறியது. உலகளாவிய பிரதிநிதிகள் மற்றும் பிரமுகா்களைக் கொண்ட உயா் பாதுகாப்பு அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர பிம்பத்தை சேதப்படுத்துவதாக உள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:20 AM

இத்தகைய நடத்தை முறையான எதிா்ப்பை காட்டிலும் பொது ஒழுங்கு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என நீதிபதி தெரிவித்தாா்.

அவா்கள் மீது பாரதீய நியாய சன்ஹிதா பிரிவுகள் 121 (அரசு ஊழியரை கடமையிலிருந்து தடுக்க காயப்படுத்துதல்) மற்றும் 61(2) (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடு என்று அழைக்கப்படும் இந்த 5 நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்.16-ஆம் தேதி தில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி பிப்.20-ஆம் தேதி நிறைவடைந்தது.