கொல்கத்தா-குவஹாத்தி வழித்தடத்தில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் மோடி, வரும் நாள்களில் கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை மேற்கு வங்கத்தின் ஹவுரா முதல் அசாமின் காமாக்யா இடையே இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சுமார் 966 கி.மீ. தூரத்தை ஒரே ஒரு நிறுத்தத்துடன் (மால்டா டவுன்) 4.30 மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கும். உணவுடன் சேர்த்து 3ஏசிக்கு ரூ. 2,300 மற்றும் 2ஏசிக்கு ரூ.3,000, 1ஏசிக்கு ரூ.3,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் சோதனை இன்னும் ஓரிரு நாள்களில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் 15-20 நாள்களுக்கு இந்த ரயில் சேவைத் தொடங்கும் என்றும், இந்த சேவையைய பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலிலும் 16 பெட்டிகள் உள்ளன. 11 ஏசி 3-டயர், 4 ஏசி 2-டயர், மற்றும் ஒரு ஏசி 1-வது பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் 823 பயணிகள் பயணிக்க முடியும்.
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “விமானப் பயணத்தைவிட குறைவாக இருக்கும் வகையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குவஹாத்தி-ஹவுரா விமானப் பயணத்திற்கு சுமார் ரூ.6,000 – 8,000 வரை செலவாகும்.
வந்தே பாரத்தில், 3வது ஏசி கட்டணம் உணவுடன் சேர்த்தே ரூ.2,300 ஆகவும், 2வது ஏசி சுமார் ரூ.3,000 ஆகவும், 1வது ஏசி சுமார் ரூ.3,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரை மனதில் கொண்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன” என்றார்.
சில நாள்களுக்கு முன்னதாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா முதல் நக்ரா இடையிலான வழித்தடத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் கண்ணாடி தம்ளர்களில் நீர் வைத்து சோதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.