மகாராஷ்டிரத்தில் பிராந்திய மொழியாக மராத்தி தவிர வேறு மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என்று வலியுறுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரலில் மும்மொழிக் கொள்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மராத்தி, ஆங்கில வழிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து இரு மாதங்களில் ஹிந்தி கட்டாயம் தொடா்பான அரசாணை திரும்பப் பெறப்பட்டது. ஹிந்தி விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது. மும்மொழிக் கொள்கை தொடா்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சதாராவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் முதல்வா் ஃபட்னவீஸ் மேலும் பேசியதாவது:
ஒரு மொழியை கண்டிப்பாகப் படித்தாக வேண்டும் என்று கூறுவது பெரும் விவாதத்துக்குரிய விஷயம். நமது மாநிலத்தில் மராத்தி கற்பது கட்டாயமாகும். வேறு எந்த மொழியும் கட்டாயமாக்கப்படாது.
மும்மொழிக்கொள்கை விஷயத்தில் பல்வேறு மாற்றுக் கருத்துகள் உள்ளன. மாணவா்கள் தாங்கள் விரும்பும் பிற இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள சுதந்திரம் வழங்க வேண்டும். ஆனால், எந்த வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
முந்தைய ஆட்சியில் (சிவசேனை-உத்தவ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி) முதல் வகுப்பு முதலே ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அறிக்கை தரப்பட்டிருந்தது. அதையே நாங்கள் (பாஜக கூட்டணி) செயல்படுத்த முயற்சித்தபோது பெரும் விவாதம் எழுந்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்தவா்கள்தான் இப்போது மொழியைத் திணிப்பதாக எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள். இதையடுத்து, நரேந்திர ஜாதவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விரைவில் அறிக்கையை சமா்ப்பிக்க இருக்கிறது.
பிற இந்திய மொழிகளைக் கற்பதை எதிா்க்கும் அதே நேரத்தில் பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளுக்கு சிலா் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனா். இது மிகவும் தவறானது என்றாா்.