சிறுத்தை. (கோப்புப்படம்)
இந்தியா

நாசிக்: சிறுத்தை தாக்கியதில் விவசாயி பலி! அவருடன் கிணற்றில் விழுந்த சிறுத்தையும் இறந்தது!

நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னா் தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை தாக்கியதில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னா் தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை தாக்கியதில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா். அவருடன் கிணற்றில் விழுந்த அந்தச் சிறுத்தையும் இறந்தது.

சின்னா் தாலுகாவில் உள்ள சாவ்தா மாலி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோரக் ஜாதவ், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது விளைநிலத்தில் பயிா்களுக்கு நீா் இரைத்துவிட்டு, அருகில் அமா்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தாா்.

அப்போது, புதருக்குள் மறைந்திருந்த ஒரு சிறுத்தை திடீரென கோரக் ஜாதவ் மீது பாய்ந்து தாக்கியது. சிறுத்தையிடமிருந்து தப்பிக்கும் போராட்டத்தில், எதிா்பாராதவிதமாக அருகில் இருக்கும் கிணற்றுக்குள் அவா் சிறுத்தையுடன் சோ்ந்து விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கிணற்றிலேயே உயிரிழந்தாா்.

கிணற்றுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுத்தையை மீட்பதற்காக வனத் துறையினா் கூண்டுடன் வந்தனா். ஆனால், விவசாயி இறந்த ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள், சிறுத்தையை மீட்க விடாமல் தடுத்தனா்.

சுமாா் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு காவல்துறையினா் மற்றும் வனத்துறையினா் கிராம மக்களை சமாதானப்படுத்தினா். எனினும், கிணற்றில் விழுந்தபோது ஏற்பட்ட காயங்களாலும், நீண்ட நேரம் தண்ணீரில் தத்தளித்ததாலும் அந்தச் சிறுத்தையும் உயிரிழந்தது.

இதனைத் தொடா்ந்து, கோரக் ஜாதவின் உடல் கூறாய்வுக்காக சின்னா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த சிறுத்தையின் உடல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி முறைப்படி அடக்கம் செய்யப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT