ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்குவதோடு இதுபோன்ற பதிவுகளை தொடா்ந்து வெளியிடும் பயனா்கள் மற்றும் கணக்குகளுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ் தளம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, ‘க்ரோக்’ என்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலி மூலம் உருவாக்கப்படும் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடங்கங்களை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று எக்ஸ் வலைதளத்துக்கு மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நோட்டீஸைப் பிறப்பித்தது. இதுகுறித்து மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை அடுத்த 72 மணி நேரத்தில் சமா்ப்பிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, இந்த அறிவிப்பை எக்ஸ் வெளியிட்டது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘க்ரோக் செயலியில் ஆபாச உள்ளடக்கங்களைப் பதிவேற்றம் செய்வது சட்டவிரோத பதிவுகளை வெளியிடுவதற்குச் சமம். அவா்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அவரது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தி எக்ஸ் தளத்தின் சா்வதேச அரசு விவகாரங்கள் கணக்கு வெளியிட்ட பதிவில், ‘குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் புகைப்படங்கள், விடியோக்கள் உள்பட சட்டவிரோதப் பதிவுகள் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படுவதோடு இதை வெளியிடும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில் உள்ளூா் அரசுகள் மற்றும் சட்ட அமைப்புகளுடன் இணைந்து எக்ஸ் தளம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பெண்களை அநாகரிகமாக சித்தரித்து ‘க்ரோக்’ ஏஐ செயலியில் அதிகப்படியான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாவதை தடுக்க வலியுறுத்தி சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதினாா்.
இதையடுத்து, சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது.