ராஜஸ்தானில் எருமை, கன்றுக்குட்டிக்கு இரண்டு நபர்கள் உரிமை கோரிய விவகாரத்தில் கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்டா போலீஸார் கூறுகையில், நாராயண் விஹாரில் வசிக்கும் ராம் லால், தனது எருமை மற்றும் கன்றுக்குட்டி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தொடர்ந்து அவற்றைத் தேடி வந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள இந்திரஜித் கேவத் என்பவர் அவற்றை கட்டி வைத்திருப்பதைக் கண்டார். ராம் லால் உடனடியாக இந்திரஜித்தை அணுகி, அந்த மாடுகள் தனக்குச் சொந்தமானது என்று கூறினார்.
ஆனால் அவற்றை கொடுக்க மறுத்த இந்திரஜித், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாடி கிராமத்திலிருந்து எருமையை வாங்கியதாகவும், அது சுமார் 7 வயதுடையது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இரு தரப்பினரும் சனிக்கிழமை குன்ஹாடி போலீஸ் நிலையத்தை அடைந்தனர். விசாரணையில், இரு தரப்பினரும் எருமை மாட்டிற்கு தொடர்ந்து உரிமை கோரினர். ராம் லாலா எருமைக்கு சுமார் நான்கு முதல் ஐந்து வயது என்றும் சமீபத்தில்தான் ஈன்றதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் இந்திரஜித் அந்த விலங்கு சுமார் 7 வயதுடையது என்று தெரிவித்தார். பரஸ்பர புரிதல் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண போலீஸார் முயன்றனர். ஆனால் அது முடியாததால், கால்நடை மருத்துவர்களை அணுகினர். எருமை கோட்டாவின் மொகபாடா பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. எருமையின் பற்கள் மற்றும் உடல் நிலையை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், எருமைக்கு சுமார் நான்கு முதல் ஐந்து வயது என்றும் இந்திரஜித் கூறியது போல் ஏழு வயது அல்ல என்றும் முடிவு செய்தனர்.
மருத்துவ அறிக்கை மற்றும் துணை ஆதாரங்களின் அடிப்படையில், ராம் லால் கூறிய கருத்தை போலீஸார் உறுதிப்படுத்தி, எருமை மற்றும் அதன் கன்றை சனிக்கிழமை மாலை அவரிடம் ஒப்படைத்தனர். எனினும், இந்த முடிவில் மற்றொரு உரிமைகோருபவரான இந்தரஜித் திருப்தி அடையவில்லை. எனவே, அவரிடம் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் அதில் அவர் தோல்வியடையவே இறுதியாக எருமை ராம்லாலிடம் ஒப்படைக்கப்பட்டது என்று குன்ஹாடி காவல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.